சமிந்த, ஹேஷா ஒருபோதும் அரசுடன் இணையவேமாட்டர்! ஐக்கிய மக்கள் சக்தி திட்டவட்டம்.
“ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி, ஹேஷா விதானகே ஆகியோர் ஒருபோதும் அரசுடன் இணையமாட்டார்கள்.’
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச்செயலாளர் அசோக அபேசிங்க எம்.பி. ஊடகங்களிடம் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி, ஹேஷா விதானகே ஆகியோர் தொகுதி அமைப்பாளர் பதவிகளை இராஜிநாமா செய்துள்ளனர். இது தொடர்பில் கட்சியின் பொதுச்செயலாளருக்கும் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.
இவ்வாறு தொகுதி அமைப்பாளர் பதவியை இராஜிநாமா செய்துள்ள இருவரும் விரைவில் அரசுடன் இணைவார்கள் எனத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையிலேயே அந்தத் தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. அசோக அபேசிங்க மறுத்துள்ளார்.
“ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஜனநாயக் கட்சி. சமிந்த விஜேசிறி, ஹேஷா விதானகே ஆகிய இருவருக்கும் மாவட்டம் தொடர்பில் பிரச்சினை இருக்கலாம். அதனைப் பேசித் தீர்த்துக்கொள்வோம். ஆனால், ஒருபோதும் அரசுடன் இணையமாட்டார்கள் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன்” – என்று அசோக அபேசிங்க எம்.பி. தெரிவித்தார்.