அரசில் தவறு இடம்பெறும்போது அமைதியாக இருந்திட முடியாது! கம்மன்பில அதிரடி.
“அரசில் தவறு இடம்பெறும்போது நாம் அமைதியாக இருந்திட முடியாது. தட்டிக்கேட்க எமக்கு உரிமை உண்டு.”
இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்கு ஆதரவு வழங்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொழிற்சங்கப் பிரமுகர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அமைச்சர் விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அத்துரலிய ரத்தன தேரர் உட்பட மேலும் பலர் பங்கேற்றனர்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையகத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் அரசின் தீர்மானத்தை முறியடிப்பது தொடர்பில் இதன்போது தீவிரமாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இதற்கான அழுத்தத்தைப் பிரயோகிக்கும் வகையில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் உதய கம்மன்பில,
“ஐக்கிய தேசியக் கட்சி அரசு செய்யும்போது தவறாக இருந்த ஒரு விடயம் எமது அரசு செய்யும்போது சரியாகிவிடாது. சரி என்றால் அதை யார் செய்தாலும் சரி. தவறென்றால் அதை யார் செய்தாலும் தவறு. நபர்கள் முக்கியமில்லை.
எம்மால் உருவாக்கப்பட்ட அரசு, எமது அணி எனத் தவறு இடம்பெறும்போது அமைதியாக இருந்தால் அரசிடமிருந்து மக்கள் விலகிவிடுவார்கள். அரசைப் பாதுகாக்கவே நாம் செயற்படுகின்றோம்.
மக்கள் சபைக் கூட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி நிச்சயம் நடக்கும்” – என்றார்.