“ஹூட்” என்ற குரல் அடிப்படையிலான செயலியை அறிமுகப்படுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த்.
ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா விசாகன், அம்டெக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சன்னி போகலாவுடன் இணைந்து நிறுவியுள்ள “ஹூட்” என்ற குரல் அடிப்படையிலான செயலியை கடந்த திங்கட்கிழமை நடிகர் ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தினார்.
எழுத படிக்க தெரியாதவர்கள் கூட இந்த செயலி வாயிலாக மற்றவர்களுக்கு தாங்கள் சொல்ல வரும் கருத்துக்களை, தங்கள் சொந்த குரல் வாயிலாக தெரிவிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
ஹூட் செயலியின் அறிமுக விழாவில் பேசிய சவுந்தர்யா, கிளப் ஹவுஸ், டுவிட்டர் ஸ்பேசஸ் போல் இல்லாமல், யார் வேண்டுமானாலும் குரல் பதிவு செய்யும் வகையில் ஹூட் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார் சவுந்தர்யா. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சந்தித்து ஹூட் செயலி பற்றி விவரித்து, அவருடைய வாழ்த்துகளை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.