வங்காளதேசத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அபுதாபியில் இன்று நடைபெற்ற உள்ள 20-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன.
இப்போட்டியில், டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் முகமதுல்லா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, வங்காளதேச அணியின் தொடக்க வீரர்களாக தாஸ் மற்றும் முகமது நைம் களமிறங்கினர். நைம் 5 ரன்னிலும், தாஸ் 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்துவந்த ஷகிப் 4 ரன்னில் வெளியேறினார். சற்று நிலைத்து நின்று ஆடிய முஸ்பிஹூர் ரஹீம் 29 ரன்கள் சேர்த்தார். ஆனால், பின்னர் வந்த வீரர்கள் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து வீரர் மில்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் பட்லர் களமிறங்கினர்.
இரு வீரர்களும் சிறப்பான தொடக்கம் அளித்தனர். பட்லர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த டேவிட் மலானுடன் ஜோடி சேர்ந்த ராய் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் விளாசிய ராய் 38 பந்துகளில் 61 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 14.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 126 ரன்கள் எடுத்தது. இதனால், வங்காளதேசத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தி வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.