‘ஏக்கத்தமாய் கேக்கப் பயம்!’ – குட்டிக்கட்டுரை – கோதை
“மிஸ், ஆடு மீன்ஸ்- டான்ஸ், ரைட்?” இணையவழியாக தமிழ் கற்கும் பதின்ம வயதுப் பையனை, நான் கொஞ்சமும் அதிசயப்படாமல், இவனை எப்படி தமிழ் பேச வைப்பது என யோசித்தேன்.
இங்கு, இங்கிலாந்தில், ஆங்கில மூலம் தமிழ் கற்கும் பத்து பதின்ம வயதுக் குழந்தைகள் இந்த வகுப்பறையில் என்னிடம் கற்கிறார்கள். இசகு, பிசகாகக் கேள்விக் கணைகள் தொடுக்கும் இவர்கள் என் பாடத்தில் சந்தேகம் இருப்பதாக நையாண்டி பண்ணுகிறார்களா அல்லது உண்மையிலேயே பெருத்த சந்தேகமா என்பது அவர்கள் முகத்தில் தெரியாதது எனக்குப் பெரும் சோதனைக் காலம். மிகச்சுட்டியான முகம் இவர்களுக்கு!
நான் பள்ளியால் வந்து, ஆற அமர ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் இந்த வகுப்பில் உள்ள மாணவர்களும் மாணவிகளும் மிக ஆர்வமாகக் கேள்விகள் கேட்பதால், இவர்களுக்கு எப்படியாவது தமிழ் பேசுவதற்கும் அதன் பின்னர் எழுதுவதற்கும் உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு! , இம்மாணவ, மாணவிகளுக்கு மெதுவாக உயிர், மெய் எழுத்துகளையும், அவற்றோடு தொடர்புள்ள சிறு சொற்களையும் கற்றுத் தருவதும் மிக சுவாரசியமாக இருக்கிறது.
ஒரு தவணையில் பாதித்தவணை முடிந்ததும், எதற்கும் கேட்டு வைக்கலாம் என ஒரு யோசனையில், தொடர்ந்தும் படிக்க ஆவல் உள்ளதா எனக் கேட்டேன். அவர்கள் இணைந்திருக்கும் பாடசாலை நிர்வாகத்தின் அன்புத்தொல்லை தாங்க முடியாமல் இவர்களுக்கு கற்பிக்கத் தொடங்கியிருந்தாலும், வளர்ந்த, தமிழ் பேசத் தெரியாத மாணவர்கள் என்பதைத் தவிர பெரிதாக இவர்களைப் பற்றிய விபரங்கள் தெரிந்திருக்கவில்லை.
மிகச்சரளமான ஆங்கிலத்தில், நாங்கள் உன்னிடம் தமிழ் கற்பதில் ஆவலாக உள்ளோம், எனப் பதில் வந்தது, ஒரு மாணவி மாத்திரம் தன் நகத்தை மிகக் கவனமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அன்றாடம், எனது பள்ளியில் என்னிடம் கல்வி கற்கும் 28 குழந்தைகள் பற்றியும் அவர்கள் குடும்பச் சூழல், பெற்றோர் பற்றியும் அக்கு வேறு ஆணி வேறாக தெரிந்து வைத்திருக்கும் எனக்கு, இந்தக் குழந்தைகள் பற்றியும் கட்டாயம் தெரிய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்த தமிழ்ப் பள்ளி நிர்வாகத்துடன் தொடர்பு கொண்ட போது அவர்கள் சொன்ன பதில் என்னை ஆச்சர்யப்படுத்தியது.
பத்து மாணவர்களில் இருவரைத் தவிர மிகுதி எண்மரும், வேற்று மொழி பேசும், அல்லது பாதி -முழுதான சிங்களக் குழந்தைகளாம். தாய் அல்லது தந்தை தமிழ் அல்லது சிங்களமாகவோ அல்லது இருவருமே சிங்களமாகவோ இருப்பதால் தமிழ் பேச, வாசிக்க முடியாமல் இருந்திருக்கிறது. இருந்தாலும் ஒரு மொழியைக் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அதுவும் ஒரே நாட்டில் உள்ள மொழியைப் பேசவாவது தெரிய வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்தது பெருமைக்குரிய விடயமாகவே உணர்ந்தேன்.
சந்தர்ப்பம் கிடைத்தால், தமது குழந்தைகளை சிங்கள மொழி கற்பதற்கு எத்தனை தமிழ்ப் பெற்றோர்கள் அனுமதிப்பார்கள் என யோசித்ததில் ஒரு நட்பு ஒன்றின் திருவாசகம் ஞாபகத்தில் வந்து தொலைத்தது, “ ஏக்கத்தமாய் கேக்கப் பயம்!”