வட ஆபிரிக்க மாலிக்குள் ரஸ்யா ; வெளியேறுகிறது பிரான்ஸ் : சண் தவராஜா

வட ஆபிரிக்க நாடான மாலியில் நிலைகொண்டுள்ள தனது நாட்டுப் படைகளை விலக்கிக் கொள்ளப் போவதாக பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
மாலியில் தற்போது உள்ள இராணுவ ஆட்சியில் தற்காலிக தலைமை அமைச்சர் பொறுப்பை வகிக்கும் சோகுவல் கொகல்லா மாய்கா, பிரான்சின் இந்த முடிவைக் கண்டித்துள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றும் போது அவர் இந்தத் தகவலை வெளியிட்டிருந்தார்.

 

முன்னாள் பிரான்ஸ் குடியேற்ற நாடான மாலி ஆபிரிக்காவின் சாஹெல் பிராந்தியத்தில் அமைந்துள்ளது. நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட இந்த நாட்டில் 19.1 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள ஏழாவது பெரிய நாடான மாலி – ஆபிரிக்கக் கண்டத்தின் பெரும்பாலான நாடுகளைப் போன்று – வறிய நாடாகவே உள்ளது. கனிம வளங்கள் நிறைந்த நாடாக இருப்பினும், குடியேற்றவாதச் சுரண்டல்கள் சுதந்திரத்தின் பின்னான காலப்பகுதியிலும் வெவ்வேறு வழிவகைகள் ஊடாகத் தொடர்தல், ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் திறமையின்மை, நாட்டில் உள்ள பல்வேறு இனக் குழுமங்களுக்கு மத்தியில் நிலவும் வரலாற்றுக் காலப் பகைமை, இத்தகைய பகைமையை முடிவுக்குக் கொண்டுவர ஆட்சியாளர்கள் முயற்சி செய்யாமை, முறையான நிர்வாக மேலாண்மை இல்மையால் தொடரும் பஞ்சம், பசி, பட்டினி, மக்களின் அறியாமை எனப் பல்வேறு காரணங்களால் ஆபிரிக்காவின் பெரும்பாலான நாடுகள் வறிய நாடுகளாகவே நீடிக்கும் அவலம் தொடர்கதையாக உள்ளது.

இத்தகைய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆயுதக் குழுக்கள், தீவிவாத அமைப்புகள் என்பவற்றின் செயற்பாடுகள் தம் பங்கிற்கும் மக்களின் துயரங்களை மேலும் அதிகரிக்கச் செய்து வருவதையும் காண முடிகின்றது.

அரபுலக வசந்தம் என்ற பெயரில் 2011இல் ரியூனிசியாவில் ஆரம்பித்த மக்கள் புரட்சியைச் சாக்காக வைத்து லிபியாவில் இருந்த கேணல் கடாபியின் ஆட்சியை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முடிவிற்குக் கொண்டு வந்தமையை நாமறிவோம்.

இதனால் லிபியாவில் தொடங்கிய உள்நாட்டுப் போர் பத்து வருடங்களாக நடைபெற்று வருவதும், ஒரு நிலையான அரசாங்கம் இல்லாமல் அந்த நாட்டு மக்கள் தவிப்பதும் இரகசியமான விடயமும் அல்ல.
லிபியாவில் இயங்கிய ஆயுதக் குழுக்கள், அந்த நாட்டின் உள்நாட்டுப் போரில் பங்கெடுத்துக் கொண்ட இஸ்லாமியத் தீவிரவாதிகள் – தாம் அந்த நாட்டில் பெற்ற பயிற்சிகளையும், தமக்கு மேற்குலகிடம் இருந்து கிடைத்த ஆயுதங்களையும் கொண்டு – தமது சொந்த நாடுகளுக்குத் திரும்பி அங்கே ஆயுதப் போராட்டங்களை ஊக்குவித்தனர்.

அத்தகைய ஒரு தீவிரவாதச் செயற்பாடு மாலியின் வடக்குப் பிராந்தியத்தில் 2012 ஆரம்பமான போதில் வெகு விரைவிலேயே அந்தப் பிராந்தியம் தீவிரவாதிகளின் கைகளில் வீழ்ந்தது.

எதிர்பாராமல் நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற ஆட்சியாளர்கள் உதவி கோரி தமது மேனாள் குடியேற்ற எசமானர்களான பிரான்சின் காலடிக்குச் சென்றனர்.
காத்திருந்த பிரான்ஸ் 2013இல் தனது படையினரை சாஹெல் பிராந்தியத்துக்கு அனுப்பி வைத்தது. குறுகிய காலத்திலேயே மாலியின் வடக்குப் பிராந்தியத்தின் பெரும் பகுதி அரசின் கட்டுப்பாட்டில் வந்து விட்டாலும் இஸ்லாமியத் தீவிரவாதம் இன்னமும் அந்தப் பகுதியில் முழுவதுமாக முடிவுக்கு வந்துவிடவில்லை. அதேவேளை, இஸ்லாமியத் தீவிரவாதம் அயல் நாடுகளுக்கும் பரவியது. பிரான்ஸ் படைகளின் பிரசன்னமும் அதிகரித்தது.
தற்போதைய நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 5,100 படையினர் சாஹெல் பிராந்திய நாடுகளான மாலி, மௌறிற்றானியா, நைகர், புர்க்கினா பாசோ மற்றும் சாட் ஆகிய நாடுகளில் நிலைகொண்டுள்ளனர்.

 

தீவிரவாதிகளை ஒடுக்கும் நோக்குடன் தனது நாட்டிற்கு வந்த பிரான்ஸ் படைகள், தமது சொந்த நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக தீவிரவாதிகளுடன் இணைந்து செயற்படுவதாக மாலி அரச மட்டத்தில் இருந்தும், படைத் தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் வெளிவந்த நிலையில் அந்த நாட்டில் ஒரு வருட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு தடவைகள் இராணுவச் சதிகள் நடைபெற்றுள்ளன.

coup leader Col Assimi Goïta

இரண்டு தடவைகளிலும் தற்போதைய தற்காலிக அரசுத் தலைவராக விளங்கும் கேணல் அஸ்ஸிமி கொய்ற்றாவே சம்பந்தப் பட்டிருந்தார்.

தீவிரவாதிகளை ஒடுக்கும் செற்பாடுகளில் பிரான்ஸ் நாட்டின் ஒத்துழைப்பு போதாது எனக் கருதும் இவர் ரஸ்யாவில் உள்ள ‘வக்னர் குறுப்’ எனப்படும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை நாடியுள்ளார். இந்த நிறுவனம் ஏற்கனவே ஆபிரிக்காவில் லிபியா, மடகாஸ்கர், மொசாம்பிக், சூடான்  மற்றும் மத்திய ஆபிரிக்கக் குடியரசு ஆகிய நாடுகளில் தனது பாதுகாப்பு ஆலோசகர்களைப் பணியில் ஈடுபடுத்தி உள்ளது. அவர்களது வெற்றிகரமான செயற்பாடுகளால் உந்தப்பட்ட கேணல் அஸ்ஸிமி தற்போது அவர்களைப் பணியில் அமர்த்தத் தீர்மானித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய ‘வக்னர் குறுப்’ நிறுவன ஆலோசகர்கள் சிரியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிலும் தற்போது செயற்பட்டு வருகின்றனர். மேனாள் ரஸ்ய ஆயுதப் படையின் உறுப்பினர்கள் அடங்கிய இந்த நிறுவனம் மறைமுகமாக ரஸ்ய உளவுப் பிரிவின் மறைமுக அனுசரணையுடனேயே செயற்பட்டு வருவதாக மேற்குலகினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் ரஸ்யா இதனை முழுவதுமாக மறுத்து வருகின்றது.

இரண்டாம் உலகப் போரின் பின்னான காலப் பகுதியில் ஆபிரிக்கக் கண்டத்தில் மிகுந்த செல்வாக்குமிக்க நாடாக விளங்கிய சோவியத் ஒன்றியம், அந்தக் கண்டத்தில் உள்ள பல நாடுகளிலும் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்களுக்கு பெருமளவு ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.

சோவியத் ஒன்றியத்தின் உடைவோடு அந்தச் செல்வாக்கு வலுவிழந்து போனது. அண்மைக் காலமாக ரஸ்யாவில், புட்டின் தலைமையில் உருவாகியுள்ள மீழெழுச்சி, அந்த நாட்டை ஒரு உலக வல்லரசு என்ற நிலைக்கு உயர்த்தியுள்ள நிலையில் ஆபிரிக்கக் கண்டத்தில் தனது செல்வாக்கை விரிவாக்கம் செய்ய ரஸ்யா முயற்சிகளைச் செய்து வருகின்றது.

ஸ்ரொக்ஹோல்ம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் 2016 முதல் 2020 வரையான காலப்பகுதியில் ரஸ்ய ஆயுத ஏற்றுமதி ஆபிரிக்கக் கண்டத்தில் 18 வீழுக்காடாக அதிகரித்துள்ளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த இரண்டு மாதங்களில் ஆபிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான நைஜீரியா மற்றும் எதியோப்பியா ஆகிய நாடுகளுடன் ரஸ்யா பாதுகாப்பு உடன்படிக்கைகளைச் செய்து கொண்டுள்ளது.

ஏலவே, 2019இல் ரஸ்யா – ஆபிரிக்க உச்சி மாநாடு ரஸ்ய ஒலிம்பிக் நகரான சொச்சியில் நடைபெற்றிருந்தது. இந்த வரிசையில் இரண்டாவது மாநாடு அடுத்த வருடம் நடைபெற உள்ளது.
ஏற்கனவே ஆபிரிக்கக் கண்டத்தில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கைக் கண்டு அரண்டு போயிருக்கும் மேற்குலகம், தற்போது ரஸ்யாவின் ஈடுபாடு தொடர்பிலும் அபாய அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது. ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரியான யோசப் பொரல் அவர்களுடனான சந்திப்பு தொடர்பில் ரஸ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கை லவ்ரோவ் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து ஒன்று இத்தருணத்தில் நினைவில் கொள்ளத்தக்கது. “ரஸ்யாவுக்கு ஆபிரிக்காவில் வேலையில்லை. அது எங்கள் பிராந்தியம் என பொரல் தெரிவித்த கருத்து காலனித்துவ மனோபாவத்தை வெளிப்படுத்துகிறது. நாங்கள் முன்னமேயே வந்து இடத்தைப் பிடித்துவிட்டோம் எனச் சொல்வதற்கு ஒப்பானது” என்கிறார் லவ்ரோவ்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அதன் படைத் தளங்கள் ஆபிரிக்காவில் 27 இடங்களில் உள்ளன. தவிர. ஆபிரிக்க நாட்டுப் படைகளுடன் இணைந்து ‘ஆப்ரிகொம்’ என்ற படைக் கட்டுமானத்தையும் அமெரிக்கா கொண்டுள்ளது. இருந்தும் ரஸ்ய அபாயம் தொடர்பாகக் கவலை வெளியிடுவது முரண்நகையாக உள்ளது.

 

மொத்தத்தில், ஆபிரிக்கக் கண்டத்தில் யார் செல்வாக்குச் செலுத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. அந்தக் கண்டத்தில் துயரத்திலும், வறுமையிலும் வாடும் மக்களுக்கு யார் நன்மை செய்கிறார்கள் என்பதே முக்கியம்.

Leave A Reply

Your email address will not be published.