இராணுவ வசமிருந்த 11 ஏக்கர் காணிகள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 7ம் வட்டாரப்பகுதியில் அமைந்துள்ள இதுவரை இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த 11 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய ஆவணத்தினை முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிலப்பிட்டிய உத்தியோகபூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களிடம் இன்று(28) கையளித்துள்ளார்.
இந் நிகழ்வில் 68ஆவது படைப்பிரிவு தலைமையத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயக்காந், காணிக் கிளை அதிகாரிகள், கிராமசேவையாளர் மற்றும் 68 ஆவது படை அதிகாரிகள் ஆகியேர் கலந்து கொண்டுள்ளார்கள்.
இது குறித்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயக்காந்தன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்:
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 7ம் வட்டாரம் பகுதியில் அமைந்துள்ள 11 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இதில் 10 ஏக்கர் காணிகள் புதுக்குடியிருப்பு கிழக்கு கிராமஅலுவலகர் பிரிவிலும், ஒரு ஏக்கர் காணி சிவநகர் கிராம அலுவலகர் பிரிவிலும் உள்ளடங்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு கிழக்கினை சேர்ந்த 10 ஏக்கர் காணிகளும் புதுப்புலவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமாக இருக்கின்றது. இந்த காணிகளின் உரிமைகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கையில் ஈடுபடவேண்டியுள்ளது.
அதுவரை அந்த காணிகள் கிராம அலுவலகர் பொறுப்பில்விட்டு கிராம அலுவலகர் அந்த காணிகள் தொடர்பிலான ஒழுங்குகளை மேற்கொண்டு அவற்றை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் முடிவெடுத்து அவற்றை உண்மையானவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.