இனவெறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து நற்செய்தி சொன்ன டி காக்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஒருவர் போலீசாரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை அடுத்து இனவெறிக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் எழுந்தன. மேலும் அனைத்து மக்களும் சமம் என்றும் இனவெறிக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்ற கோஷங்களும் இருந்தது. இந்த உணர்வு கிரிக்கெட் விளையாட்டிலும் வெளிப்பட்டது. கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு வீரர்கள் “Black Lives Matter” விவகாரத்திற்கு தங்களது ஆதரவினை பாகுபாடின்றி வழங்கினர். அந்த வகையில் ஐசிசி நடத்திவரும் இந்த டி20 உலக கோப்பை தொடரிலும் இனவெறிக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழங்காலிட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஐசிசி அனைத்து அணிகளிடமும் கேட்டுக்கொண்டது.
அதன்படி ஒவ்வொரு போட்டிகள் துவங்கும் முன்னரும் இரு அணி வீரர்களும் முழங்காலிட்டு தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின்போது தென்னாபிரிக்க வீரர் குவிண்டன் டி காக் முழங்காலிட்டு ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டார். இதன் காரணமாக அவரின் இந்த செயலமீது சர்ச்சை வெடித்தது. அதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அவர் அணியில் இருந்து விலகினார்.
இந்நிலையில் டி காக் இப்படி இனவெறிக்கு எதிராக ஆதரவு தெரிவிக்க மறுத்ததால் அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அவர் அணியில் இருந்தும் நீக்கப்படுவார் என்றும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள டி காக் கூறுகையில் : நான் இனவெறிக்கு ஆதரவு கொடுப்பவன் கிடையாது. அப்படி நான் நினைத்திருந்தால் நான் எளிதாக முட்டி போட்டுவிட்டு பொய் சொல்லி இருக்க முடியும். நானும் சிறுவயதில் இனவெறியால் பாதிக்கப்பட்ட ஒருவன் தான்.
நானும் ஒரு கலப்பின குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் எனது சகோதரிகள் வெள்ளை நிறத்தை சேர்ந்தவர்கள் ஆனால் என்னுடைய வளர்ப்பு தாயாரும் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவர் தான். எனவே நான் இனவெறிக்கு ஆதரவு கொடுப்பவன் கிடையாது. அனைவரும் சமமானவர்கள் என்பதை மட்டுமே நான் நம்புகிறேன். உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் அது மட்டுமே என்னுடைய எண்ணம் அதனை புரிந்து கொள்ளுங்கள். என்னுடைய செயலால் யாரேனும் கஷ்டப்பட்டு இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
என்னை பொறுத்தவரை அனைவருக்கும் ஒரு உரிமை உண்டு. இதை செய்யவேண்டும் இந்த வழியில்தான் நடக்க வேண்டும் என்று என்னிடம் சொல்லும்போது என்னுடைய உரிமை பறிக்கப்படுவதாக உணர்ந்தேன். அதன் காரணமாகவே நான் முழங்காலிட சம்மதம் தெரிவிக்கவில்லை. இனி வரும் போட்டிகளில் நான் தென்னாப்பிரிக்கா தொடர்ந்து விளையாடுவேன் மேலும் இனவெறிக்கு எதிரான இந்த செயலில் நான் முழு ஆதரவும் அளிப்பேன் என்று உறுதி அளித்ததை அடுத்து அவர் அடுத்து வரும் போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.