கர்நாடகாவில் ஏழு பேருக்கு ஏ.ஒய். 4.2 கொரோனா வைரஸ் பாதிப்பு – எச்சரிக்கைவிடுக்கும் அதிகாரிகள்

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து நீடித்துக் கொண்டேவருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராமல் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் மூன்றாவது அலை குறித்தான அச்சம் தொடர்ந்து நீடித்துவருகிறது.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் தற்போது நாள் ஒன்றுக்கு 35,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அமெரிக்காவிலும் கடந்த ஒருவார காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த ஒரு வாரத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் சராசரி 71,000-ஆக இருந்துவருகிறது. சீனாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதற்கு கொரோனா டெல்டாவின் புதிய திரிபான ஏ.ஒய் 4.2 வைரஸ்தான் என்று தெரியவந்துள்ளது.

முன்னதாக இந்த ஏ.ஒய் 4.2 குறித்து தெரிவித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘ஏ.ஒய். 4.2 கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மைக் கொண்டது என்று தெரிவித்துள்ளார். இந்தநிலையில், கர்நாடாக மாநிலத்தில், ஏழு பேருக்கு கொரோனா ஏ.ஒய். 4.2 வைரஸ் திரிபு கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஏ.ஒய் 4.2 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.