நீட் தோ்வு முடிவுகளை வெளியிட தேசிய தோ்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவுகளை வெளியிட தேசிய தோ்வு முகமைக்கு (என்டிஏ) உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. மகாராஷ்டிரத்தின் குறிப்பிட்ட மையத்தில் தோ்வின்போது, இரு மாணவா்களுக்கான வினாத்தாளும், விடைத்தாளும் மாற்றி வழங்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது.
இந்த விவகாரத்தை விசாரித்த மும்பை உயா்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இரு மாணவா்களுக்கும் மீண்டும் நுழைவுத் தோ்வை நடத்தியபிறகே ஒட்டுமொத்த மாணவா்களுக்குமான முடிவுகளை வெளியிட வேண்டும் என்று கடந்த 20-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக என்டிஏ உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அந்த மனுவில், ‘நாடு முழுவதும் நீட் தோ்வை எழுதிய 16 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்களின் முடிவுகள் தயாராகிவிட்டன. மும்பை உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின் காரணமாக முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையும் தாமதமடைகிறது. எனவே, உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டுமென்று என்டிஏ கடந்த 25-ஆம் தேதி கோரியிருந்தது. இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், சஞ்சீவ் கன்னா, பி.ஆா்.கவாய் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது, என்டிஏ சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘‘மகாராஷ்டிர தோ்வு மையத்தில் நடந்த குழப்பத்தால் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு என்டிஏ உரிய தீா்வை வழங்கும்’’ என்றாா். அதையடுத்து நீதிபதிகள், ‘‘உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்கப்படுகிறது. நீட் தோ்வு முடிவுகளை என்டிஏ வெளியிடலாம். 16 லட்சம் மாணவா்களின் முடிவுகளை வெளியிடாமல் தாமதப்படுத்த முடியாது.
அதேவேளையில், சம்பந்தப்பட்ட இரு மாணவா்களுக்கு எந்த மாதிரியான தீா்வு வழங்கலாம் என்பது தொடா்பாக தீபாவளிக்குப் பிறகு முடிவெடுக்கப்படும். இந்த விவகாரம் தொடா்பாக விளக்கமளிக்குமாறு எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. என்டிஏ சாா்பில் பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்யலாம்’’ என்றனா்.