இரு மாதங்களுக்கு சீமெந்து தட்டுப்பாடு – விலை மேலும் அதிகரிக்கும்.
சந்தையில் தற்போது சீமெந்துக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை இன்னும் இரு மாதங்களுக்கு நீடிக்குமென சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனா்.
இந்த விடயபரப்புக்கு பொறுப்பான அமைச்சருடன் கொழும்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னா் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனா்.
இரு நாட்களில் சீமெந்து தட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. எப்படியும் குறைந்ததது இன்னும் இரு மாதங்களாவது தேவைப்படும். டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினையினாலேயே சீமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், சீமெந்து விலையில் அதிகரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் இறக்குமதியாளா்கள் சுட்டிக்காட்டியுள்ளனா்.
50 கிலோ கிராம் சீமெந்து பக்கட் ஒன்றின் விலை 93 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன் அதன் விலை 1,098 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இருந்தபோதிலும் சீமெந்து முறையாக விநியோகிக்கப்படுவதில்லை என்றும் அவ்வாறு விநியோகித்தாலும் ஒவ்வொரு விலையில் கிடைப்பதாக வியாபாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா். 100 சீமெந்து மூடைகள் இருந்தால் அவை 10 நிமிடத்தில் விற்பனையாகும் அளவுக்கு சந்தையில் சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக நிர்மாணத்துறையிலுள்ளவர்கள், சீமெந்து கல், பூஞ்சாடி நிர்மாணம்,பூங்கா அழங்கரிப்பு பொருட்களை நிர்மாணித்தல் ஆகிய தொழிலில் ஈடுபடுபவர்களின் வருமானம் தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் சீமெந்து இறக்குமதியாளர்கள் இன்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதுதொடர்பில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாவது,
எதிர்வரும் 3 மாதங்களில் சந்தைகளுக்கு தேவையான அளவு சீமெந்து தொகையைக் கொண்டுவருவதற்கு இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.