விவசாயிகளுக்கு இழப்பீடு உறுதி! ஆர்ப்பாட்டங்களைக் கைவிடுங்கள்!மஹிந்தானந்த கோரிக்கை
“நனோ- நைட்ரஜன் திரவ உரத்தைப் பயன்படுத்தி குறைவான விளைச்சலை பெறும் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் சுற்றறிக்கை எதிர்வரும் வாரம் வெளியிடப்படும். பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான உரம் விவசாயிகளுக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. ஆகவே, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.”
– இவ்வாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இறக்குமதி செய்யப்படும் உரமானது, அவசியம் என உறுதிப்படுத்தப்பட்ட பயிர்ச்செய்கைகளுக்குத் தேவையான உரம் மற்றும் கிருமிநாசினிகளை மூன்று அமைச்சுக்கள் ஊடாக இறக்குமதி செய்ய விவசாயத்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய தேயிலை மற்றும் தெங்கு உட்பட பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்குத் தேவையான உரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவுறுத்தல் மற்றும் அனுமதிபத்திரம் வழங்கும் பொறுப்பு பெருந்தோட்ட அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுக்கு அவசியமான பூக்கள் உட்பட்ட அதுனுடன் தொடர்புடைய பயிர்ச்செய்கைக்குத் தேவையான அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கும் அதிகாரம் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நீர் மூலமான பயிர்ச்செய்கை, இடைவெளியை அடிப்படையாகக் கொண்ட பயிர்ச்செய்கை ஆகியவற்றுக்குத் தேவையான உரம் இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் விவசாயத்துறை அமைச்சின் ஊடாக விநியோகிக்கப்படும்.
பெரும்போகத்துக்குத் தேவையான சேதன பசளை உரம் மற்றும் நனோ நைட்ரஜன் கிருமிநாசினிகள் நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து விவசாய திணைக்களங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
ஆகவே, விவசாயிகள் பெரும்போக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமாகும்” – என்றார்.