மாகாண சபைத் தேர்தலுக்கு எதிரான அமைச்சர்கள் எங்கே? சஜித் அணி கேள்வி

“மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது, மாகாண சபை முறைமை ஒழிக்கப்படும் என்றெல்லாம் அமைச்சர்களான விமல் வீரசன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர ஆகியோர் சூளுரைத்தனர். ஆனால், இந்தியாவின் அழுத்தத்தால் அரசு தேர்தலை நடத்த தயாராகின்றது. இது தொடர்பில் அமைச்சர்கள் மூவரினதும் நிலைப்பாடு என்ன?”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“மாகாண சபை முறைமை எமது நாட்டுக்கு பொருத்தமற்றது, அந்த முறைமையை ஒழிக்க வேண்டும், புதிய அரசமைப்பு ஊடாக இது நடக்கும் என அமைச்சர்களான விமல் வீரசன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர ஆகியோர் தெரிவித்துவந்தனர்.
ஆனால், இந்தியாவின் இராஜாதந்திரிகள் வந்துசென்ற நிலையில், அவசர அவசரமாக தேர்தலை நடத்துவதற்கு அரசு தயாராகின்றது. ஆரம்பத்தில் எதிர்ப்பு வெளியிட்ட அமைச்சர்கள் மௌனம் காக்கின்றனர். இது தொடர்பில் அவர்களின் நிலைப்பாடு என்ன?
தேர்தல் நடைபெறுவதை நாம் எதிர்க்கவில்லை. பாராளுமன்றத் தேர்தலைக் கூட எதிர்கொள்வதற்கு தயார். ஆனால், பிற நாடுகளில் அழுத்தத்தால் தேர்தல் நடைபெறுவதையும், உள்ளக விடயங்கள் மாற்றப்படுவதையும் நாம் விரும்பவில்லை. சர்வதேச அழுத்தங்களுக்கு இந்த அரசுதான் வழிவகுத்துள்ளது” – என்றார்.