கன்னட நடிகர் உயிரிழப்பு.144 தடையுத்தரவு அமுல்.

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ள நிலையில், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், இன்று காலை தனது இல்லத்தில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் 11.40 மணியளவில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சில மணிநேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புனித் ராஜ்குமார் உயிரிழந்த சம்பவம் தெரிந்ததும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மருத்துவமனைக்கு வெளியே ரசிகர்கள் கூடி குவிந்தவண்ணம் இருக்கிறார்கள்.
இதுபோன்ற பதட்டமான சூழ்நிலை காரணமாக பெங்களூர், மைசூர் உட்பட பல்வேறு நகரங்களிலும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் பூட்டப்பட்டு வருகின்றன. அலுவலகம் சென்றவர்கள் அவசரமாக வீடுகளை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.