5 வயது சிறுவனை மாடியிலிருந்து தலைகீழாக தொங்கவிட்ட ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சேட்டை செய்த 5 வயது சிறுவனை மாடியிலிருந்து தலைகீழாக தொங்கவிட்ட தலைமையாசிரியர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள அஹ்ரௌரா பள்ளியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பள்ளியில் படித்துவரும் 5 வயதான சிறுவன் ஆசிரியர் சொல்பேச்சு கேட்காமல் சேட்டை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த சிறுவனுக்கு பயத்தை ஏற்படுத்தும் விதமாக பள்ளி தலைமையாசிரியர் பள்ளி மாடியிலிருந்து அவரது கால்களைப் பிடித்து தலைகீழாக தொங்கவிட்டுள்ளார். இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.
சிறுவனுக்கு அச்சம் ஏற்படுத்துவதற்காக தலைகீழாக மாடியிலிருந்து தொங்கவிட்ட சம்பவத்தை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர். ஆசிரியர்கள் இத்தகைய முறையில் கண்டிப்பது மாணவர்களுக்கு அபாயத்தை விளைவிப்பதாகக் கூறி கல்வியாளர்கள் கண்டனங்கள் எழுப்பி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.