முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு நீர் திறப்பு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இன்று காலை கேரளாவிற்கு உபரி நீர் திறக்கப்பட்டது. கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள 13 மதகுகளில், 3 மற்றும் 4 ஆகிய இரண்டு மதகுகள் மூலம் வினாடிக்கு 534 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 139.50 அடி வரையில் வரும் நவம்பர் 11 ஆம் தேதி வரை அணையில் நீரைத் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 138.70 அடியாக உள்ளபோதே கேரளாவிற்கு உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இது, தமிழக மக்களிடையேயும் தமிழக விவசாயிகள் இடையேயும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
பல்வேறு போராட்டங்கள் நிபுணர்களின் ஆய்வுகளுக்குப் பின் அணை பலமாக இருக்கிறது என்று கூறி கடந்த 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த ஆணையிட்டது. அதற்குப்பின் 2014, 2015, 2018 ஆகிய மூன்று ஆண்டுகளில் அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டும் அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் கட்டத்தை நெருங்கியபோது, அணையிலிருந்து கேரளாவிற்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. அதோடு அணையில் இருந்து தமிழகத்திற்கு அதிகபட்சமான வினாடிக்கு 2300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசு போராடிப் பெற்ற 142 அடி என்ற கனவு தகர்க்கப்பட்டிருப்பதாக கருத்துக்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் 13 மதகுகளில் 3 மற்றும் 4வது மதகுகள் 35 சென்டிமீட்டர் உயர்த்தப்பட்டு அணையில் இருந்து வினாடிக்கு 534 கன அடி நீர் வல்லக்கடவு வழியாக இடுக்கி அணைக்கு வெளியேற்றப்படுகிறது. படிப்படியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது.
அணை திறப்பு நிகழ்வில் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின், வருவாய்த்துறை அமைச்சர் ராஜன், இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர் சீபா ஜார்ஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.