பயணத்தடை முற்றாக நீங்கினாலும் ஆபத்து இன்னும் குறையவில்லை! மக்களே மிக அவதானம்.
“இலங்கை முழுவதிலும் அமுலில் இருந்த சகல பயணத்தடைகளும் நீக்கப்பட்டாலும் கொரோனாவின் ஆபத்து இன்னமும் குறையவில்லை. எனவே, மக்கள் அனைவரும் புதிய சுகாதார விதிமுறைகளுக்கமைய மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.”
இவ்வாறு இராஜாங்க அமைச்சரான விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டாலும், ஆபத்து இன்னமும் குறையவில்லை.
டெல்டா பிளஸ் பிறழ்வு நாட்டுக்குள் நுழையும் அபாயமுள்ளது.
ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தடுப்பூசித் திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டபோதும், டெல்டா பிளஸ் பிறழ்வால் ஆபத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
இலங்கையும் அத்தகைய ஆபத்திலேயே உள்ளது” – என்றார்.