ஒரே ஓவரில் 4 சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்த ஆசிஃப் அலி!
டி20 உலக கோப்பையில் க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று துபாயில் நடந்தது.
சூப்பர் 12 சுற்றில் இந்தியா, நியூசிலாந்து ஆகிய 2 வலுவான அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்ற அதே உத்வேகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. ஸ்காட்லாந்தை 130 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற அதே நம்பிக்கையுடன் தான் ஆஃப்கானிஸ்தானும் களமிறங்கியது.
20 ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி 147 ரன்கள் அடிக்க, 148 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் வெறும் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் 3 ஓவர்களை அருமையாக வீசி ரன்களை கட்டுப்படுத்தினார். முஜிபுர் ரஹ்மான் ரன்னை கட்டுப்படுத்தினாலும், கேப்டன் முகமது நபி ரன்களை சற்று அதிகமாக வழங்கினார்.
முஜிபுர் ரஹ்மான் தொடர்ச்சியாக 4 ஓவர்களை வீசி 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 10 ஓவர்கள் வரை ரஷீத் கானை கொண்டுவரவேயில்லை ஆஃப்கான் கேப்டன் முகமது நபி. 11வது ஓவரில் தான் ரஷீத் கானை பந்துவீசவே வைத்தார் நபி.
11, 13, 15 மற்றும் 17 ஆகிய 4 ஓவர்களை வீசிய ரஷீத் கான், 15வது ஓவரில் முகமது ஹஃபீஸை 10 ரன்னுக்கும், 17வது ஓவரின்(அவரது ஸ்பெல்லின்) கடைசி பந்தில், அரைசதம் அடித்திருந்த பாபர் அசாமை 51 ரன்னுக்கு வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
18வது ஓவரை வீசிய நவீன் உல் ஹக் வெறும் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து சீனியர் வீரரான ஷோயப் மாலிக்கை வீழ்த்தினார். கடைசி 2 ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட, கரீம் ஜனத் வீசிய 19வது ஓவரில் 4 சிக்ஸர்கள் விளாசி அந்த ஓவரிலேயே ஆட்டத்தை முடித்தார் ஆசிஃப் அலி.
இதையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்று ஒரு காலை எடுத்து டி20 உலக கோப்பை அரையிறுதியில் வைத்துவிட்டது.