” ஞானசாரரும் இருக்கட்டும், ஹிஸ்புல்லாவும் இருக்கட்டும்”உபுல் ஜோசப் பெர்னாண்டோ
ஜூலை 3, 2014 அன்று, அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ , ‘தெரண’ விற்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
பின்வருவது அந்த அறிக்கை :-
“பொதுபால சேனாவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”
பொதுபல சேனா அமைப்புடன் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைப்புக்கு தாம் எவ்வித ஆதரவையும் வழங்கவில்லை என அத தெரணவிடம் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். பல்வேறு குழுக்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படும் போது, குறுகிய அரசியல் நோக்கங்களை அடைய முயற்சிக்கும் நபர்களே இவ்வாறான பிரச்சினைகளுக்குப் பின்னால் இருப்பதாகக் கூறுவதாக பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டுகிறார். ஜெனிவாவில் இலங்கை மனித உரிமைப் பிரச்சினையை எதிர்நோக்கியிருக்கும் வேளையில், இலங்கையை ஸ்திரமற்ற நிலைக்கு மாற்ற முயற்சிக்கும் ஒரு குழுவினர் தமக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் அமைதிக்காக தான் எப்போதும் பாடுபட்டதாகவும் அந்த அமைதியை சீர்குலைக்கும் வகையில் எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அத தெரணவிடம் மேலும் தெரிவித்துள்ளார்.
அட தெரண
03.07.2014
அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அத தெரணவுக்கு மாத்திரமன்றி டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் பொதுபலாவுக்கும் ஞானசார தேரருக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
“எனக்கும் பொதுபல சேனாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இலங்கை ஊடகங்களில் இவ்வாறான பொய்ப் பிரசாரங்கள் வெளியிடப்படுவதால், சர்வதேச ஊடகங்கள் அதனை நம்புகின்றன. நான் பொதுபல சேனாவுடன் தொடர்புடையவன் என எவரேனும் சாட்சியமளித்தால், பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவேன்.
கோத்தபாய ராஜபக்ச
டெய்லி மிரர்
30.06.2014
அத்தோடு நிற்காமல் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் அப்போதைய இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரியவிடம் தமக்கு பொதுபலாவுக்கும் ஞானசார தேரருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வாசிக்க வைத்தார்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் பொதுபல சேனாவுக்கும் தொடர்பில்லை என நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.
ராணுவ செய்தி தொடர்பாளர்
டெய்லி எஃப்டி
03.07.2014
அப்போது கோத்தபாய மட்டுமல்ல மஹிந்தவின் அரசாங்கத்திலிருந்த விமல் வீரவன்ச போன்ற அமைச்சர்களும் பொதுபல சேனாவுக்கும் ஞானசார தேரருக்கும் நோர்வே பணம் தருவதாகவும் முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதற்கு நோர்வே அரசாங்கம் ஞானசார தேரரையும் பொதுபல சேனாவை கைக்கூலியாக பயன்படுத்துவதாகவும் கூறினார்கள். இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானங்களை நிறைவேற்றிய போது இலங்கைக்கு எதிராக முஸ்லிம் நாடுகளை வாக்களிக்க வைப்பதற்காக நோர்வே உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொதுபலா சோனாவையும் ஞானசார தேரரையும் பயன்படுத்தி இலங்கையில் முஸ்லிம் வன்முறைகளை தூண்டி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
“அப்படியானால், ஞானசார அல்லது பொதுபலசேனாவுக்கும் தனக்கும் தொடர்பே இல்லை என சத்தியம் செய்த கோட்டாபய இன்று ஜனாதிபதியான பின் , ஒரு நாடு, ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி செயலணியை உருவாக்கி அதன் தலைவராக ஞானசார தேரரை எவ்வாறு நியமிக்க முடியும்?”
அங்குதான் பிரச்சனை இருக்கிறது.
2015ஆம் ஆண்டு வண.ஞானசார தேரரின் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளுக்கு மஹிந்த அரசாங்கம் ஆதரவளித்த காரணத்தினாலேயே மஹிந்த தோற்கடிக்கப்பட்டார்.
சம்பிக்கவின் ஜாதிக ஹெல உறுமயவையும், விமலின் நிதஹஸ் பெரமுனவையும் தாக்க ஞானசாரவின் பொது பலாவை பயன்படுத்த வேண்டும் என அன்றைய மகிந்த அரசு நினைத்தது.
இதற்குள் சம்பிக்கவும் , விமலும் பாக்கரின் கசினோ திட்டத்திற்கு எதிராக மகிந்த அரசின் அமைச்சரவைக்குள் இருந்து கொண்டு வெறித்தனமாக பேயாட்டம் ஆடிய போது, சம்பிக்க மற்றும் விமல் ஆகியோரை பலவீனப்படுத்தி ஓரம் கட்ட பொதுபல சேனாவைக் கொண்டு வர வேண்டும் என்று ராஜபக்சக்கள் முடிவு செய்தனர்.
இதனால் 2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் மஹிந்தவை ஜனாதிபதியாக்க உதவிய ரிஷாட்டின் முஸ்லிம் வாக்குகளை மஹிந்த இழந்தார். பொதுபல சோனாவிவின் நடத்தைகள் காரணமாகவே மகிந்தவின் அரசிலிருந்து ரிஷாட் மற்றும் ஹக்கீம் மகிந்த அரசை விட்டு வெளியேறினர்.
2015ஆம் ஆண்டு மைத்திரி ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ஊடகவியலாளர் எக்னலிகொட மீதான வழக்கு விசாரணைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மட்டும் இல்லாமல் , ஞானசாரர் மீது வேறு வழக்குகளும் தொடரப்பட்டன. தேரருக்கு எதிராக ஆஜரான சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பாளராக அப்போதைய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இருந்தார். அப்போது அவர் அட்டர்னி ஜெனரலாக இருந்தார். ஜயந்த ஜயசூரிய தலைமையிலான சட்டமா அதிபர் திணைக்களம், சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரரை 6 வருடங்கள் சிறையில் அடைக்குமாறு வழக்குத் தாக்கல் செய்தது. இன்று அவர் நாட்டின் தலைமை நீதிபதியாக உள்ளார். ஞானசார தேரரோ ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்கும் படையின் தலைவராக உள்ளார்.
ஆறு வருடங்கள் சிறைத் தண்டனை பெற்ற ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கினார். அப்போதைய நிலையில் 2019 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் வண.ஞானசார தேரரின் பொதுபலசேனாவின் ஆதரவைப் பெற மைத்திரிபால விரும்பினார். அந்த நோக்கத்தோடுதான் மைத்ரிபால ஞானசாரரை விடுவித்தார். இருப்பினும், ஞானசாரரால் தொடங்கப்பட்ட பிரச்சாரத்தால் மைத்ரிக்கு அல்ல , கோட்டாபயவுக்கே ஜனாதிபதி அபேட்சகராகவும் , ஜனாதிபதி ஆகவும் முடிந்தது .
இப்போது மீண்டும் ராஜபக்சக்களுக்கு சாவால் விடும் , அரசாங்கத்தின் கூட்டாளியான விமல், உதய கம்மன்பில ஆகியோரை மௌனமாக்க ஞானசார தேரரை தட்டி எழுப்பி இருக்கிறார்கள்.
எனவேதான் ஒரு நாடு ஒரே சட்டம் இயற்றும் படி வண.ஞானசார தேரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் ஞானசார தேரரிடம் ஒரு நாடு ஒரே சட்டத்தை இயற்றுவதற்காக அரசாங்கம் ஒப்படைத்துவிட்டு , மத்திய கிழக்கின் பிரதான முஸ்லிம் நாடான ஓமானிடம் இருந்து எண்ணெயை கடனாக பெற , கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை ஓமானுக்கு விற்க ஆரம்பித்துள்ளது.
கொழும்பின் பொருளாதார மையத்தின் மையப்பகுதியில் ஓமான் , நில அபகரிப்புகளை செய்ய முயல்கிறது.
சவூதி நிதியில் மட்டக்களப்பில் ஷரியா பல்கலைக்கழகத்தை கட்டி கிழக்கை அரேபியமாக்கிய ஹிஸ்புல்லாஹ்வின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் எந்தக் கேள்வியும் இன்றி சிறப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த அன்றைய வேளையில்தான் , கொழும்பின் பொருளாதார மையத்தை ஓமான் கைப்பற்ற முயன்று கொண்டிருந்தது.
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு இருந்தபோது , கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா, சவுதி அரேபியாவிலிருந்து வந்திருந்த அரேபியர்களுடன் ஒரு விடுதியில் சந்தித்து கலந்துரையாடிய வீடியோ பதிவு வெளியான போது அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், உலகில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள் என ஹிஸ்புல்லாஹ் பகிரங்கமாக பேசினார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக மைத்திரி – ரணில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் ஹிஸ்புல்லாஹ் , காத்தான்குடியை அரபு மயமாக்கியது தான்தான் எனவும் கூறினர். ஈஸ்டர் குண்டுதாரி சஹாரானை தாம் சந்தித்ததை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஹிஸ்புல்லாவும் ஒப்புக்கொண்டார்.
காத்தான்குடி முஸ்லிம் தலைவர்கள் தெரிவுக்குழுவிற்கு வந்து சஹாரானை எதிர்க்கும் போது ஹிஸ்புல்லாஹ் சஹாரானின் தவ்ஹீத் ஜமாத்தை பாதுகாத்ததாக கூறினார்கள். மேலும், ஹிஸ்புல்லாவின் கோட்டையான கந்தன்குடியில் இராணுவ முற்றுகையின் போது சஹாரானின் குண்டுவீச்சுகளும் உறவினர்களும் வெடித்துச் சிதறினர். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக மைத்திரி – ரணில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் காத்தான்குடி முஸ்லிம் அமைப்புக்கள் வந்து ஹிஸ்புல்லாஹ் கிழக்கை அரபு மயமாக்கியதாக கூறினர். ஈஸ்டர் குண்டுதாரி சஹாரானை தாம் சந்தித்ததை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஹிஸ்புல்லாவும் ஒப்புக்கொண்டார்.
கந்தன்குடி வாழ் முஸ்லிம் தலைவர்கள் தெரிவுக்குழுவிற்கு வந்து , சஹாரானை தாங்கள் எதிர்க்கும் போது ஹிஸ்புல்லாஹ் , சஹாரானின் தவ்ஹீத் ஜமாத்தை பாதுகாத்ததாக குற்றம் சாட்டினார்கள்.
மேலும், ஹிஸ்புல்லாவின் கோட்டையான காத்தான்குடியை இராணுவம் முற்றுகையிட்ட போது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தேடப்பட்டு வந்த சஹாரானின் உறவினர்களும் குண்டுவீச்சுகளுக்கு இலக்காகி வெடித்துச் சிதறினர்.
“அப்படியானால் ஹிஸ்புல்லாஹ் எப்படி கேள்வியே இல்லாமல் வசதியாக இருக்க முடியும்?”
2019 ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு ஆதரவான முஸ்லிம் வாக்குகளை உடைப்பதற்காக 2019 ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக ஹிஸ்புல்லா போட்டியிட்டார். 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஹிஸ்புல்லாஹ்வின் முஸ்லிம் வாக்குகள் கோட்டாபயவுக்கே கிடைக்கும் என எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்திருந்தார். சிங்கள பௌத்த வாக்குகள் 100% கிடைக்கும் என உறுதியில்லாத நிலையில் ராஜபக்சவினர் இருந்தனர்.
“ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஹிஸ்புல்லாவைக் கொல்லுங்கள் என்று கூச்சலிட்ட ஞானசார தேரர் உள்ளிட்ட பிக்குகள் ஏன் இப்போது ஹிஸ்புல்லாவின் பெயரைக் கூட குறிப்பிடுவதில்லை?”
ரணசிங்க பிரேமதாச, தான் பிரதமராக இருந்த காலத்தில் பண்டாரநாயக்கா குடும்பம் , அவர்களது பங்களாக்களில் ஏற்படும் தகராறுகளில் இருந்து எப்படி தப்பினார்கள் என்பதை பழைய கவிதையொன்றிலிருந்து எடுத்துரைத்தார்.
“ஆயாக்களும் இருக்கட்டும்,
அப்புக்களும் , இருக்கட்டும்,
நாங்கள் இருவரையும் சீண்டிவிடுவோம்”
பிரேமதாசா அப்போது பாராளுமன்றத்தில் வாசித்த சுவையான கவிதை இது.
அந்த கவிதையை போலவே இன்றைய இந்த அரசாங்கமும் இயங்குகிறது.
” ஞானசாரரும் இருக்கட்டும்,
ஹிஸ்புல்லாவும் இருக்கட்டும்,
நாங்கள் அவர்களையும் சீண்டி விடுவோம்.”
இது அரசாங்கத்தின் இப்போதைய தீம் பாடல்.
ஆனால் இதே ஞானசார தேரர் , திருப்பி ஒருநாள் ராஜபக்சக்களுக்கே வினையாவார் என்பது இன்னும் தெரியாமல் இருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
- உபுல் ஜோசப் பெர்னாண்டோ (குருதா விக்கிரகய)
தமிழில்: ஜீவன்