புதிய A.30 கொரோனா திரிபு – இலங்கையிலும் பரவலடையும் ஆபத்து.
அநேகமான உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தி வரும் A.30 என்றழைக்கப்படும் கொரோனா தொற்றின் புதிய திரிபு தொடர்பில் இலங்கையிலும் அச்சுறுத்தல் நிலை இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளாா்.
திருமண நிகழ்வுகள் மற்றும் மரண சடங்குகளின் போது சுகாதார விதிமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் செயற்படுவதன் காரணமாக இந்த வைரஸ் அதிகளவில் பரவலடைவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.
இந்த புதிய வைரஸ் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
உலக நாடுகளில் கொரோனா தொற்றின் புதியவொரு திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது. பைசர், அஸ்ட்ராசெனிக்கா உள்ளிட்ட பிரதான வகைகளைச் சேர்ந்த சகல வகை தடுப்பூசிகளினூடாகவும் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை உடைத்தெறிவதற்கான தன்மை புதிய திரிபான A.30 திரிபிடம் இருக்கிறது.
இந்த புதிய திரிபு பரவலடைந்தால் பாரிய நெருக்கடியைச் சந்திக்க நேரிடுமென்று முழு உலகமும் எச்சரிக்கை நிலையுடன் செயற்பட்டுவருகின்றது. ஆகவே, இதுதொடர்பில் நாமும் அவதானம் செலுத்த வேண்டும். கொரோனா முற்றாக நிறைவுக்கு வந்துவிட்டது என்று எண்ணி மக்கள் செயற்பட்டால் மேலும் நான்கே வாரங்களில் இந்தி திரிபின் பிரதிகூலத்தை அனுபவிக்க நேரிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளாா்.