தமிழக நடிகர்கள் அரசியல் புரிதல் இல்லாமல் மேடைகளில் மட்டும் அரசியலை பேசுகிறார்கள் – இயக்குனர் அமீர்
தமிழ் நடிகர்கள் முல்லைப் பெரியாறு குறித்து பேச வேண்டுமென்றால் இயக்குனர்கள் இதற்கான இயக்கத்தை முன்னெடுக்கவேண்டும் என இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மலையாள நடிகர் ப்ருத்விராஜ் பற்ற வைத்த நெருப்பை கடந்த சில நாள்களாக சர்ச்சையை கிளப்பியுள்ளது. கேரளா மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் போது எல்லாம் முல்லை பெரியாறு அணையை சீண்டுவதை அங்குள்ள அரசியல்வாதிகள் வாடிக்கையாக வைத்துள்ளார். இப்போது நடிகர்கள் சிலர் அந்தப்பிரச்சாரத்தை முன்னெடுக்க தொடங்கிவிட்டனர். முல்லை பெரியாறு அணையின் கொள்ளளவை 142 அடிக்கு உயர்த்த விட மாட்டோம். நிலநடுக்கத்தால் அணை உடையும் அபாயம் உள்ளது. முல்லை பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என சமூகவலைத்தளத்தில் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டனர்.
“125 ஆண்டுகள் பழமையான இந்த அணை இன்னும் செயல்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. அரசியலையும் பொருளாதாரத்தையும் ஒதுக்கிவிட்டு சரியானதைச் செய்ய வேண்டிய நேரம் இது. நாம் அரசு அமைப்புகளை மட்டுமே நம்ப முடியும். அரசு அமைப்புகள் இதில் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வோம்” என ட்விட்டரில் ப்ருத்வி ராஜ் கூறிய கருத்துக்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீர் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “ மம்முட்டி மோகன்லால் சுரேஷ்கோபி என கேரள நடிகர்கள் அரசியல் கட்சிகளில் பணியாற்றிக் கொண்டு நடிப்பதை மட்டுமே தொழிலாக வைத்துள்ளனர். தமிழக நடிகர்கள் அரசியல் புரிதல் இல்லாமல் மேடைகளில் மட்டும் அரசியலை பேசுகிறார்கள். கேரளாவில் உள்ள பெரிய வர்த்தகம் பாதிக்கும் என நினைப்பதாலேயே தமிழ் நடிகர்கள் முல்லைப் பெரியாறு குறித்து வாய் மூடி மௌனம் காக்கிறார்கள்.
தமிழர்களின் வாழ்வுரிமை பற்றி பேச தயாராக இல்லாமல் ஒரே இரவில் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் தமிழ் நடிகர்கள். தமிழ் நடிகர்கள் முல்லைப் பெரியாறு குறித்து பேச வேண்டுமென்றால் இயக்குனர்கள் இதற்கான இயக்கத்தை முன்னெடுக்கவேண்டும். நானும் வெற்றிமாறனும் முல்லைப் பெரியாறு குறித்து விரைவில் அறிக்கை வெளியிட்டு நடிகர்களை அணிதிரட்ட உள்ளோம்’ என்றார்.