திமுக கொடுத்த தவறான வாக்குறுதியால் 4 மாணவர்கள் உயரிழப்பு – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
மாணவர்களை படித்து நீட்தேர்வு எழுத விடாமல், நாங்க வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக கொடுத்த தவறான வாக்குறுதியால் இந்த ஆட்சியில் 4 மாணவர்கள் உயரிழந்துள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை அதிமுக அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் அதிமுக புறநகர் தெற்கு- புறநகர் வடக்கு-மாநகர் மாவட்ட கழகங்கள் சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் இதுவரையில் இல்லாத அளவுக்கு குளறுபடிகளை தி.மு.க.வினர் செய்துள்ளார்கள் என தெரிவித்தார். 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகள் வளர்ச்சி பணிகளை நாம் கொடுத்துள்ளதால் கோவை மக்களுக்கு நம்மீது நம்பிக்கை இருக்கின்றது என தெரிவித்தார்.
இப்போது இருந்தே கட்சி பொறுப்பாளர்கள் தேர்தல் பணியை துவங்க வேண்டும், நாம் வலுவாக இருக்கின்றோம் என தெரிவித்த அவர், ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என்றார். திமுகவினர் எதிர்கட்சியாக இருந்த போதும் வேலை பார்த்தார்கள், இப்போதும் வேலை பார்க்கின்றனர் என தெரிவித்த அவர் ,அதிமுக நிர்வாகிகள் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என தெரிவித்தார். வார்டில் எதிர்கட்சியினர் வந்து விட்டால் அந்த பகுதியில் மரியாதையே இல்லாத நிலை ஏற்படும். செல்வாக்காக, செலவு செய்யகூடிய வேட்பாளராக பார்த்து தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
திமுக பணத்தை வைத்து ஜெயித்து விடலாம் என நினைக்கின்றனர் என கூறிய அவர்,தி.மு.க. வந்து இப்போதுவரை எதையும் செய்யவில்லை என தெரிவித்தார். நீட் தேர்வை பொருத்தவரை , மாணவர்கள் படித்து தேர்வு நீட் எழுத விடாமல், நாங்க வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக தவறான வாக்குறுதி கூறியதால் இந்த ஆட்சியில் 4 மாணவர்கள் உயரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.
பெட்ரோல் ,டீசல் விலை குறைப்பு, சமையல் எரிவாயுக்கு மானியம், குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் இப்படி ப்ல்வேறு வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றவில்லை எனவும் குற்றம்சாட்டினார். தனி கவனம் செலுத்தினால் அனைத்து உள்ளாட்சி பதவிகளையும் பிடித்துவிடலாம் என தெரிவித்த அவர்,வரலாற்றில் யாரும் செய்யாத அளவிற்கு வளர்ச்சி பணிகளை வழங்கியுள்ளோம் என தெரிவித்தார். ஓவ்வொரு வார்டும், ஓவ்வொரு ஓட்டும் முக்கியம், இதை உணர்ந்து நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
தி.மு.க எப்போது ஆட்சிக்கு வந்தாலும் அதன் பிறகு நடக்கும் தேர்தல்களில் அனைத்திலும் தோல்வியை மட்டுமே கண்டுள்ளார்கள். இது வரலாறு.1989 முதல் இப்போது வரை அப்படித்தான் இருக்கின்றது என கூறிய அவர், தி.மு.க. எல்லா தில்லுமுல்லும் செய்வார்கள், எந்த ஓட்டும் போய் விடக்கூடாது என தெரிவித்தார்.அடுத்த இரண்டு மாதம் அர்ப்பணிப்பு தன்மையுடன் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.இந்த நிகழ்வில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.