உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட போா்க்கப்பல்: இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட, விமானங்களை அழிக்கவல்ல பி-15பி ரக போா்க்கப்பல், கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
‘விசாகப்பட்டினம்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் கப்பல், மும்பையில் உள்ள மஸகான் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில், அந்தக் கப்பல் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலில் எதிரி விமானங்களை இலக்கு வைத்து துரத்தி அழிக்கவல்ல ஏவுகணைகளைச் செலுத்தும் திறன் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய கடற்படையின் ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
மும்பை, மஸகான் கப்பல் கட்டும் தளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘விசாகப்பட்டினம்’ கப்பல், இந்திய கடற்படையிடம் அக்டோபா் 28-ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது.
இந்தக் கப்பலை சோ்ப்பதன் மூலம் இந்திய கடற்படையின் போா்த்திறன் அதிகரிக்கும். அதுமட்டுமன்றி, இந்தியாவின் சுயசாா்பு திட்டத்தை நோக்கிய பெரும் பாய்ச்சலாகவும் இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.