போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் மூவர் மாட்டினர்!
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் இரண்டு இளைஞர்கள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொழும்பு, பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவலோக்க சுற்றுவட்டப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது போதைப்பொருள் விற்பனையில் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் 7 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணத்தையும் பேலியாகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பு, வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனுராதபுரம் நகர் பிரிவில் 20 கிராம் 55 மில்லிகிராம் ஹெரோய்னுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை அநுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்து, அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அநுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த 29 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா ராகம பொலிஸ் பிரிவு, மஹர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 67 லீற்றர் 500 மில்லிலீற்றர் மதுபானத்துடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மஹர பிரதேசத்தை சேர்ந்த 20 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.