ஞானசாரரின் நியமனத்துக்கு எதிராக நீதி அமைச்சர் சப்ரியும் போர்க்கொடி!
‘ஒரு நாடு – ஒரு சட்டம்’ செயலணி தொடர்பில்
தனக்கு எதுவும் தெரியாது எனவும் கைவிரிப்பு
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரு நாடு – ஒரு சட்டம்’ என்ற செயலணி அமைக்கப்பட்டமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
குறித்த செயலணியை உருவாக்குவது குறித்து தன்னுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார் என்று கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
‘ஒரு நாடு – ஒரு சட்டம்’ என்பதற்கான 13 பேர் கொண்ட செயலணியொன்று சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியால் அமைக்கப்பட்டது.
அதன் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டதுடன், அதன் ஏனைய உறுப்பினர்களில் நான்கு முஸ்லிம்களும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்தக் குழு குறித்து தான் மகிழ்ச்சியடையவில்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அலி சப்ரி இது தொடர்பில் அதிருப்தி தெரிவித்திருந்தார் எனவும் கூறப்படுகின்றது.