மகாவீர் ஜெயந்தி நாளன்று இறைச்சி கடைகளை திறப்பதா? பாஜக நிர்வாகி நாராயணன் கண்டனம்!
ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தி நாளன்று இறைச்சிக் கடைகள் மூடப் படக்கூடிய நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. அப்படி இருக்க இந்த வருடம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள அதே நாளில் மகாவீர் ஜெயந்தி நாளும் வருகிறது. இதனால், தமிழகத்தில் அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
தமிழகத்தில் வழக்கமாக தீபாவளி தினத்தன்று, அதிகளவில் இறைச்சி வாங்குது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், நவ.4ம் தேதி தீபாவளி தினத்தன்று இறைச்சி கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு, பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இதைத்தொடர்ந்து, தீபாவளி நாளன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதேவேளையில் ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளும், ஜெயின் மத வழிபாட்டு தலங்களைச் சுற்றியுள்ள உள்ள இறைச்சிக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில், தமிழக அரசின் அறிவிப்புக்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்தவகையில், மகாவீர் நினைவு தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பதற்கு பாஜக செய்தி தொடர்பாகளர் நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வள்ளலார் தினம், மகாவீர் நினைவு நாள், திருவள்ளுவர் தினம் ஆகிய நாட்களில் இறைச்சி கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்படுவது மரபு. இறைச்சி உண்பது குறித்த அவர்களின் போதனைகளுக்கு மதிப்பளித்து இந்த வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. மகாவீர் நினைவு நாளன்று இந்த வருடம் தீபாவளி கொண்டாடப்படுவதால் இந்த ஆண்டு இறைச்சி கடைகளை அடைக்க வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திருவள்ளுவர் தினத்தன்று தீபாவளி திருநாள் வருமானால் என்ன செய்யும் இந்த அரசு? தொடர்ந்து பல முறை மகாவீர் நினைவு நாளன்று இறைச்சி கடைகளை திறக்க வேண்டும் என தொடுக்கப்பட்ட பல வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி திருநாளில் பெரும்பான்மையான மக்கள் விருப்பப்படுவதால் இறைச்சி கடைகளை அனுமதிப்பதாக அரசு கூறியிருப்பது சட்டப்படி தவறானது. ஜைன சிறுபான்மை சமுதாயத்திற்கு எதிரான செயல். அப்படி பெரும்பான்மையான மக்கள் விரும்புவதை அரசு செய்யும் என்றால், தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகளை அரசு அகற்றுமா?
விநாயகர் சதுர்த்தியன்று பிள்ளையார் சிலைகளை கரைக்க ஊர்வலம் செல்வதை தடுக்க நினைப்பது ஏன்? சிறுபான்மை சமுதாயத்தினர் மனம் புண்பட்டு விடும். அதனால் ஊர்வலம் போகக்கூடாது என்று அரசு தடை விதிப்பதேன்? ரம்ஜான், பக்ரீத், கிருஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு பெரும்பான்மையினருக்கு விடுமுறை ஏன்? அவர்கள் அதை விரும்புகிறார்கள் என்று அரசுக்கு சொன்னது யார்?
ஆகவே, மதசார்பற்ற அரசு என மார்தட்டிக்கொள்ளும் திமு௧ அரசு, சிறுபான்மை மதத்தினரின் நம்பிக்கைகளை சிதைக்கும் இந்த
உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்றங்கள் இது குறித்து அளித்த தீர்ப்புகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.