நாங்கள் அஞ்சமாட்டோம்; நீங்கள் உடன் வெளியேறுங்கள்!
சத்தங்களைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர் ஆளும் கட்சியின் கூட்டத்தில் ஒன்றைக் கூறிவிட்டு, வெளியில் சென்று இன்னுமொன்றைக் கூறுவதை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற வகையில் எம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் என்ற வகையில் எமக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளது. கட்சிக் கூட்டத்தில் ஒன்றைக் கூறி விட்டு, வெளியில் சென்று இன்னுமொன்றைக் கூறும்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற வகையில் எம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
நாங்களே பிரதான தாய்க் கட்சி என்பதே இதற்குக் காரணம். எமது கட்சி அடிபணிய விரும்பாது. நாய்தான் வாலை ஆட்ட வேண்டும், வால் நாயை ஆட்டாது என்பதை நாங்கள் தெளிவாகக் கூற வேண்டும்.
சத்தங்களைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம். எமக்கும் அந்தப் பட்டறையின் சத்தம் பழக்கமானது. இரும்புச் சத்தமும் பழக்கமானது. வாள்களின் சத்தமும் பழக்கமானது.
பொறுத்தமில்லை என்றால் என்ன செய்ய வேண்டும், விவாகரத்துச் செய்ய வேண்டும். பெண் விரும்பும் நபரை மண முடிப்பதற்காக விவாகரத்துச் செய்ய முடியும். ஆண் விரும்பிய பெண்ணை மணந்துகொள்ள முடியும்” – என்றார்.