தமிழகத்தில் இன்று முதல் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – பள்ளிகள் எப்படி செயல்படும் ?
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறும் நிலையில் பள்ளிகள் எப்படி செயல்படும் .
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில் 19, மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. இன்று முதல் 8ம் வகுப்பு வரை 50 விழுக்காடு மாணவர்களுடன் பள்ளிகள் நடைபெறும். சுழற்சி முறையில் ஒருநாள் விட்டு ஒருநாள் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும். அதனால் முதல் நாள் வரக்கூடிய மாணவர்கள் அடுத்த நாள் பள்ளிக்கு வரத் தேவையில்லை. முழுநாளும் வகுப்பு நடைபெறும்.
பள்ளிக்கு மாணவர்கள் வரவேண்டும் என்பது கட்டாயமில்லை. ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவர். மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியிலும் பாடங்களை கற்கலாம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். பள்ளி வளாகங்களில் கைகளை கழுவுவதற்கு உரிய தண்ணீர் வசதி மற்றும் சோப்பு வைத்திருக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் பயன்படுத்த கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். மாணவர்கள் பள்ளி வளாகங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல பள்ளி நுழைவு வாயில் மற்றும் வெளியே செல்வதற்கு தனித்தனி வாயில்கள் பயன்படுத்தவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் ஒருவருக்கொருவர் உணவுகளை பகிர்ந்து உண்ண கூடாது. அதேபோல குழுவாக இடைவேளை நேரங்களில் மாணவர்கள் அமரக்கூடாது. பள்ளி வளாகங்களில் விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் காலை நேர வழிபாட்டு கூட்டம் ஆகியவை நடத்தக் கூடாது.