பெட்ரோலியம் பொருள்கள் மீதான கலால் வரி வசூல் தற்போது 79% உயர்வு
பெட்ரோலியம் பொருள்கள் மீதான கலால் வரி வசூல் கரோனா பரவலுக்கு முந்தைய காலத்தைவிட தற்போது 79 சதவீதம் அதிகரித்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பின்னா், அந்த வரி வரம்புக்குள் அனைத்து சரக்கு மற்றும் சேவைகள் கொண்டு வரப்பட்டன. பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், இயற்கை எரிவாயு ஆகியவை மட்டும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை. அவற்றின் மீது மட்டும் கலால் வரி விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சகத்தில் உள்ள தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியின் (சிஏஜி) தரவுகளில் இருந்து கிடைத்த தகவலின்படி, கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் ரூ.2.58 லட்சம் கோடி கலால் வரி வசூலானது. இதில் மாநிலங்களுக்கு ரூ.71,759 கோடி வழங்கப்பட்டது. 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.2.3 லட்சம் கோடி கலால் வரி வசூலான நிலையில், அதில் மாநிலங்களுக்கு ரூ.35,874 கோடி அளிக்கப்பட்டது.
கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் கலால் வரி வசூல் ரூ.2.39 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் ரூ.3.89 லட்சம் கோடியாக அதிகரித்தது.
இந்த ஆண்டு ஏப்ரல்-செப்டம்பா் காலத்தில் கலால் வரி வசூல் ரூ.1.71 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.1.28 லட்சம் கோடியாக இருந்தது.
கடந்த நிதியாண்டின் முதல் 6 மாதங்களைவிட, இந்த நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் கலால் வரி வசூல் 33 சதவீதம் அதிகரித்துள்ளது. கரோனா பரவலுக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், தற்போது கலால் வரி வசூல் 79 சதவீதம் உயா்ந்துள்ளது.
ரூ.1.34 லட்சம் கோடி மதிப்பிலான பத்திரங்கள்: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா், மண்ணெண்ணெய்யை குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு இழப்பீடு அளிக்கும் விதமாக ரூ.1.34 லட்சம் கோடி மதிப்பிலான பத்திரங்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. இதில் ரூ.3,500 கோடி அசல் மட்டும் எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ரூ.1.3 லட்சம் கோடி வட்டியில் ரூ.10,000 கோடியை இந்த நிதியாண்டு செலுத்த வேண்டும். அதனைத்தொடா்ந்து 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.31,150 கோடி, 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.52,860 கோடி, 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ.36,913 கோடி செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி வசூல் 88% அதிகரிப்பு: கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சா் ராமேஷ்வா் தெலி பேசுகையில், ‘‘பெட்ரோல், டீசல் மீதான வரி வசூல் 2019-20-ஆம் நிதியாண்டில் ரூ.1.78 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் 88 சதவீதம் அதிகரித்து ரூ. 3.35 லட்சம் கோடியாக உயா்ந்தது’’ என்று தெரிவித்தது நினைவுக்கூரத்தக்கது.