புர்கா அணியாமல் ஜீன்ஸ் அணிந்து வந்திருந்த பெண் வாடிக்கையாளரை கடையை விட்டு வெளியேற்றிய கடைக்காரர்!
தனது கடைக்கு புர்கா அணியாமல் ஜீன்ஸ் அணிந்து வந்திருந்த பெண் வாடிக்கையாளரை கடையை விட்டு வெளியேற்றியதுடன், தட்டிக்கேட்ட அப்பெண்ணின் தந்தையை கடைக்காரரும், குடும்பத்தினரும் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அசாம் மாநிலம் பிஸ்வந்த் மாவட்டத்தில் சரியாளி எனும் பகுதியில் மொபைல் ஆக்ஸசரிஸ் கடை நடத்தி வருகிறார் நூருல் ஆமின் என்ற முதியவர். நூருலின் கடைக்கு இயர்போன் வாங்குவதற்காக இளம் பெண் ஒருவர் சென்றிருக்கிறார். ஜீன்ஸ் அணிந்திருந்த இளம் பெண்ணை பார்த்து கடுப்பான முதியவர் நூருல், அந்த பெண் ஜீன்ஸ் அணிந்திருந்ததாக கூறி உனக்கு என் கடையில் பொருள் விற்பனை செய்ய முடியாது எனவும், புர்கா அணியாமல் ஜீன்ஸ் அணிந்திருப்பதாக கூறி அப்பெண்ணை அவமதித்ததுடன், தனது கடையில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு கட்டாயப்படுத்தி வெளியேற்றியிருக்கிறார்.
முதியவர் நூருல் தனது வீட்டின் ஒரு பகுதியில் மொபைல் ஆக்ஸசரிஸ் கடை நடத்தி வரும் நிலையில், அந்த இளம்பெண்ணை நூருல் அவமதித்த போது அவரின் குடும்பத்தினர் யாருமே தடுக்கவில்லை எனவும் அந்த இளம் பெண் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். நீ என் கடைக்கு( வீட்டுக்கு) ஜீன்ஸ் அணிந்து வந்தால் உன்னைப் பார்த்து என் குடும்பத்தினர் கெட்டுவிடுவார்கள், என் மருமகள் புர்கா தான் அணிவார் என அப்பெண்ணை அவமதிக்கும் விதமாக பேசியிருப்பதாக அந்த இளம் பெண் தெரிவித்தார்.
அந்த கடையில் இருந்து நூருல் தன்னை வெளியேறியதால், அன்க்கிருந்து வெளியேறி தனது வீட்டுக்கு வந்து நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார் அந்த இளம் பெண். தன் மகளை அவமதித்ததற்காக தட்டிக் கேட்க நூருலின் வீட்டுக்கு சென்ற போது நூருல் மற்றும் அவரின் குடும்பத்தினர் சேர்ந்து கொண்டு இளம்பெண்ணின் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடைக்காரரான முதியவர் நூருருலும் அவரின் குடும்பத்தாரும் சேர்ந்து அவரை அடித்து தாக்கியிருக்கின்றனர்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும், அவரின் தந்தையும் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கவே நூருலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.