வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்!
வன்னியர் உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்ட நிலையில், இதனை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தது.
இதனை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து தருமபுரி நான்குமுனை சந்திப்பில் பாட்டாளி மக்கள் கட்சியினர் 100 நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த கோரியும் தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் செஞ்சி நான்குமுனை சந்திப்பில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், திமுக அரசு தங்களை பழிவாங்கி விட்டதாகவும் முழக்கமிட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேபோல், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக முழக்கம் இட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி சுங்கசாவடி அருகே கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாமகவினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். . இதனால் கிருஷ்ணகிரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.