5 வயது சிறுமி உட்பட மூவர் நீரில் மூழ்கி பரிதாப மரணம்!
ஐந்து வயது சிறுமி உட்பட்ட மூவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக, மொனராகலை, தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீகஹப்பிட்டிய வாவியில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார்.
குறித்த நபரை மீட்டு தம்பகல்ல வைத்தியசாலையில் சேர்த்தபோது அவர் மரணமடைந்துள்ளார் என்று தம்பகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீகஹப்பிட்டிய, தம்பகல்ல பிரதேசத்தை சேர்ந்த 53 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தம்பகல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, களுத்துறை இங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பான ஆற்றில் குளிப்பதற்காகச் சென்ற 68 வயது நபரும், 5 வயது சிறுமியும் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.
நீரில் மூழ்கியவர்களை உடனடியாக மீட்டு இங்கிரிய வைத்தியசாலையில் சேர்த்த போதிலும், அவர்கள் ஏற்கனவே மரணமடைந்துவிட்டனர் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கிரிய, ஊருகல பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக இங்கிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.