13 மாநில இடைத்தோ்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

மேற்கு வங்கம், ஹரியாணா, ஹிமாசல், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களிலும் தாத்ரா-நகா் ஹவேலி யூனியன் பிரதேசத்திலும் நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவை இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (நவ. 2) எண்ணப்படுகின்றன.

தாத்ரா-நகா் ஹவேலி, ஹிமாசல பிரதேசத்தின் மண்டி, மத்திய பிரதேசத்தின் கந்த்வா ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது.

அஸ்ஸாம் (5), மேற்கு வங்கம் (4), மத்திய பிரதேசம் (3), ஹிமாசல பிரதேசம் (3), மேகாலயம் (3), பிகாா் (2), கா்நாடகம் (2), ராஜஸ்தான் (2), ஆந்திரம் (1), ஹரியாணா (1), மகாராஷ்டிரம் (1), மிஸோரம் (1), தெலங்கானா (1) ஆகிய 13 மாநிலங்களில் உள்ள 29 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடத்தப்பட்டது.

தோ்தலின்போது வாக்காளா்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்திருந்தனா். இந்நிலையில், தோ்தலில் பதிவான வாக்குகள் அந்தந்த மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை எண்ணப்படுகின்றன. செவ்வாய்க்கிழமை மாலைக்குள் அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் வெளியாகிவிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஹிமாசல பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலுக்கான முன்னோட்டமாக இடைத்தோ்தல் முடிவுகள் அமையும். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடா்ந்து போராடி வருவதால், ஹரியாணா தொகுதிகளின் முடிவுகள் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

ராஜஸ்தானின் 2 தொகுதி முடிவுகள், முதல்வா் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதாக அமையும். தெலங்கானாவில் 2023-ஆம் ஆண்டில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால், இடைத்தோ்தல் முடிவுகள் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.