பசுமைப் பட்டாசுகளுக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம் அனுமதி!
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிப் பண்டிகை என்றாலே பட்டாசு வெடித்துக் கொண்டாடும் சூழலில், அண்மைக்காலமாக சுற்றுச்சூழல் நலன் கருதி பட்டாசு வெடிப்பதற்கு சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை காரணம் காட்டியும் பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், அந்த தொழிலை நம்பி இருப்பவர்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
இதனிடையே, நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், பட்டாசு வெடிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள இரண்டு மணி நேரத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்க வலியுறுத்தியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசு வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது, வெடிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகளையும் விதித்தது. அதேசமயம், பட்டாசு வெடிப்பதை முழுமையாக தடை செய்யவில்லை என்பதை தெளிவுபடுத்திய உச்ச நீதிமன்றம், தடை செய்யப்பட்ட பட்டாசுகளுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவித்தனர்.
இந்த சூழலில், சுற்றுச்சூழல் ஆர்வலர் தொடர்ந்த வழக்கு ஒன்றி தீர்ப்பளித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், மேற்குவங்கத்தில் பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து விதமான பட்டாசுகளுக்கும் தடை விதித்த கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. அத்துடன், பட்டாசு வழக்கில் மேற்கு வங்க மாநிலம் மட்டும் விலக்கு பெற முடியாது என்று தெரிவித்த நீதிமன்றம், பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி வழங்கியதுடன், அனைத்து மாநிலங்களுக்கும் இது பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.