மன்னார் மாவட்டத்தில் கடும் மழை குடும்பங்கள் பாதிப்பு!
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவும், இன்று திங்கட்கிழமை மாலை முதல் பெய்த மழை காரணமாகவும் மாவட்டத்தின் பல பாகங்களிலும் மழை நீர் சூழ்ந்து கொண்டுள்ளதோடு,மக்களின் வீடுகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
எனினும் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் ழை நீர் சூழ்ந்து கொண்டுள்ள போதும் தற்போது வரை எவ்வித இடப் பெயர்வுகளும் இடம் பெறவில்லை என மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் மன்னார் மூர் வீதி, உப்புக்குளம், பள்ளிமுனை, சாந்திபுரம், சௌத்பார், பனங்கட்டுகொட்டு, எமில் நகர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பல வீடுகளில் மழை நீர் சூழ்ந்து கொண்டுள்ளது.
இதனால் குறித்த வீடுகளில் உள்ள மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் அதிகாரிகள் யாரும் தமது பகுதிக்கு வருகை தரவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் மன்னார் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவு நீர் வடிகால் மற்றும் புதிதாக கிரவல் பரவப்பட்டு அமைக்கப்பட்டு வரும் தற்காலிக வீதிகள் உரிய முறையில் செப்பனிடப்படாமையினால் மழை நீரை வெளியேற்ற முடியாத நிலை காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தலைமன்னார் ஊர்மனை (கிராமம்) பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும் இதுவரை உரிய அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வரவில்லை என தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
இதனால் குறித்த பகுதியில் உள்ள பல்வேறு குடும்பங்கள் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல குடும்பங்கள் இடம் பெயர வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.