தமிழர்களும் முஸ்லீம்களும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் உணரப்பட்டு இருக்கின்றது.
தமிழ்தரப்புக்களும் முஸ்லீம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் (செவ்வாய்க்கிழமை) தமிழ் பேசும் கட்சிகளின் கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”இன்றைய சந்திப்பு ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் என்னிடமும் மனோ கணேசனிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த சந்திப்பை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழரசுக் கட்சி இந்த கலந்துரையாடலில் பங்கேற்காமை தொடர்பாக ஊடகங்கள் கேள்வியெழுப்பிய போது,குறித்த கலந்துரையாடல் தொடர்பாக ஏற்கனவே தமிழரசு கட்சியுடனும் ஏனைய கட்சிகளுடன் நடந்திருக்கின்றது.
அடையாள ரீதியாக நாம் இன்று சந்தித்தாலும் எதிர்வரும் காலங்களில் நாங்கள் சந்தித்து இதனை முன்கொண்டு செல்வதற்கு தீர்மானித்துள்ளோம்.
தமிழ்தரப்புக்களும் முஸ்லீம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்பட சாத்தியப்பாடுகள் இருக்கின்றது. அனைத்திலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றது” என்றார்.