டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற 31ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – நபீமியா அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 189 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 79 ரன்களையும், கேப்டன் பாபர் ஆசாம் 70 ரன்களையும் குவித்தனர். இதில் முகமது ரிஸ்வான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய நமீபியா அணி தொடக்கத்திலே தடுமாறியது. இருப்பினும் கிரேக் வில்லியம்ஸ் – டேவிட் வைஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பின் வில்லியம்ஸ் 40 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியதுடன், டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறியது.