பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை.

பொதுஜன பெரமுனவின் ஐந்தாவது ஆண்டு விழாவில் நாம் இன்று இணைந்து கொண்டுள்ளோம். புதிய கட்சியில் ஐந்து வருடங்களுக்குள் ஜனாதிபதி ஒருவரை உருவாக்கி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்ற அதிகாரத்தை பெற்று ஐந்தாவது ஆண்டு விழாவை கொண்டாட முடியும் என அன்று இந்நாட்டில் யாரும் நம்பவில்லை. எனினும் புதிய கட்சியொன்றுக்கு வரலாற்று ரீதியில் மேற்கொள்ளக்கூடிய பெரும் மாற்றத்தை நாம் இன்று ஏற்படுத்தியுள்ளோம்.

அதற்காக சிறைக்கு செல்லவோ அல்லது நடுவீதியில் நிற்கவோ தயாரான நிலையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவரையும் இத்தருணத்தில் கௌரவத்துடன் நினைவுகூருகிறேன்.

பொதுஜன பெரமுனவின் குறுகிய கால வரலாற்றின் ஊடாக இலங்கை அரசியலில் பெரும் பாடம் கற்க வேண்டியுள்ளது. ஆட்சி அதிகாரம் அற்று வீழ்ந்த சந்தர்ப்பத்தில் எவ்வாறு மீண்டெழுவது என்பதை பொதுஜன பெரமுனவின் கடந்த ஐந்து ஆண்டு காலத்தின் ஊடாக அறிந்து கொள்ளலாம்;. இதேவேளை, எதிர்க்கட்சியில் இருக்கும் போது பொதுமக்களின் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு அரசாங்கத்துடன் எவ்வாறு போராடுவது என்பதையும் பொதுஜன பெரமுன வரலாற்றின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்பிக் கொண்டு எதிர்க்கட்சியில் இருந்த போதே திகன கலவரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பன இடம்பெற்றன.

இவ்வாறான சூழ்நிலைகளில் மக்களை தூண்டிவிடாமல் எவ்வாறு செயற்பட முடியும் என்பதையும் எமது கடந்த கால வரலாறு காட்டுகிறது. மேலும், பொதுஜன பெரமுன இந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் விமர்சனத்திற்குள்ளானது. 52 நாட்களில் அரசாங்கம் அமைத்து பாராளுமன்றத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய தருணம் எனக்கு நினைவிருக்கிறது. அன்று பாராளுமன்றத்திற்கு வந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பாராளுமன்றக் கலையரங்கில் இருந்து எமக்கு எதிராக ஆரவாரம் செய்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இத்தகைய சக்திகளை எதிர்கொண்டுதான் பொதுஜன முன்னணி உருவானது.

நாம் எவ்வளவு ஒடுக்கப்பட்டாலும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து உழைத்தோம். நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும், போராட்டம் நடத்தி, வேலைநிறுத்தப் பேரணிகளை நடத்தி மக்களை இருளில் மூழ்க வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் பொறுப்புள்ள கட்சியாக மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டனர். மேலும், எந்த இடையூறுகள் வந்தாலும் மக்களை கைவிட்டு ஓடவில்லை. பயம், பதட்டத்துடன் முடிவுகளை எடுக்கவில்லை. அதனால் தான் இவ்வளவு சீக்கிரம் இப்பயணத்தை மேற்கொண்டோம். அந்த வரலாற்றை மனதில் கொண்டு நாம் முன்னேற வேண்டும்.
அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரை பொறுமையுடனும் அர்ப்பணிப்புடனும் அரசியலை முன்னெடுப்போம். ஆட்சிக்கு வந்ததும் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்போம். எனினும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அரசியல் செயற்பாடுகளை மறந்து விட்டு அரச நிர்வாகத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுதான் இன்று நமக்கு நடந்துள்ளது. ஒரு கட்சியின் நற்பெயரையும், புகழையும் பாதுகாப்பது ஆட்சி அதிகாரம் அல்ல.
அரச அதிகாரத்தை பெற்று அரச நிறுவனங்கள் சரியாக செய்வது போன்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி மக்கள் மத்தியில் அரசியல் செய்வதும் அவசியம். அரச அதிகாரத்தின் ஊடாக அமைச்சுக்கள், அரச நிறுவனங்களால் செய்ய முடியாத பல விடயங்கள் உள்ளன. நாம் அரசியலில் இருந்து விலகிய நிலையிலேயே ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டம் இழுத்தடிக்கப்பட்டது.

இன்று, விவசாயிகள் போராட்டங்கள் இவ்வளவு தீவிரமாக இழுத்தடிக்கப்பட்டதும் அவர்கள் மத்தியில் வேலை செய்யாமையினாலேயே ஆகும். அம்மக்களின் கோரிக்கையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அரசியலில் இருந்து ஒதுங்க ஒதுங்க, நாம் தோற்கடித்த சக்திகள், சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, பெரும் குழப்பத்தை உருவாக்க, மக்களிடையே ஊடுருவி வருகின்றனர். அந்தவகையில் இந்த நாட்டில் பொதுஜன ஐக்கிய முன்னணியை ஸ்தாபிக்க வேண்டுமாயின் ஒரு கட்சியாக அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற போதும் மக்கள் மத்தியில் அரசியலில் ஈடுபடுவது அவசியமாகும்.

அரசு அதிகாரிகள் மட்டும் நம் சார்பாக மக்களுக்கு சேவை செய்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். சுபீட்சத்தின் நோக்கு கொள்கையிலுள்ள அரசியலை அரசியலை நடைமுறைப்படுத்துவது உங்கள் பொறுப்பு. தொழிற்சாலை பணியிடங்களிலும், விவசாய நிலங்களிலும் எங்கள் கட்சியின் அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

எமக்கு வாக்களித்த மக்கள் தற்போது மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளனர் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்து நான் நன்கு பழக்கப்பட்டுள்ளேன். இதுபோன்ற காலங்களில் அரசாங்கம் செய்யாத தவறுகளுக்கும் அரசாங்கத்தையே மக்கள் குறைகூறுவர்.

மக்கள் குறை கூறலாம், உருவ பொம்மைகளை எரிக்கலாம். ஆனாலும் நாம் மக்கள் மத்திக்கு செல்ல வேண்டும். கெப்பதிகொல்லாவ பேருந்து குண்டு வெடிப்பின்போது நான் அங்கு சென்றது நினைவிருக்கும். மக்கள் குறை கூறினர். அழுதனர். என்னிடம் கோரிக்கை விடுத்தனர். எனக்கு அன்று அவர்களுக்கு ஆறுதல் கூற முடிந்தது. அம்மக்களின் முன்னிலையிலேயே நான் தேசத்தின் பாதுகாப்பிற்கான பொறுப்பை பொறுப்பேற்றேன்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும், எதிர்க்கட்சியில் இருந்தபோதும் நான் அவ்வாறே செயற்பட்டேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்ட தேவாலயங்களுக்கு செல்வதற்கு முன்னதாக நான் அங்கு சென்றேன். மக்களின் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். அவ்வாறானதொரு அரசியலே இன்று எமக்கு அவசியமாகவுள்ளது. பொதுஜன பெரமுன அந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.
நாம் எப்போதும் ஒற்றுமைக்காக பாடுபடும் கட்சியாகும். அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடமிருந்து நாம் பெற்ற மரபு. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எப்பொழுதும் இடதுசாரி அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட்டது. கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் ஒன்றிணைந்து பணியாற்றினோம்.
பொதுஜன பெரமுனவும் அது குறித்து சிந்திக்க வேண்டும். சில கட்சிகளுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கலாம். சிறு கட்சியாக இருக்கக்கூடும். அரசியல் கட்சி பெரியதோ சிறியதோ என்பது முக்கியமல்ல. நோக்கம்தான் முக்கியம். இவர்கள் அனைவரும் எங்களுடன் ஒரே வழியில் செல்பவர்கள். எங்களின் கடினமான காலங்களில் ஒரே அணியில் இருந்தவர்கள்.
ஒரு குறிக்கோளுக்காக போராடியவர்கள். அவர்கள் எமது ஆதரவாளர்கள் இல்லை. அவர்கள் நம் கைக்கூலிகள் இல்லை.
அவர்களும் நம்மோடு ஒரே இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். எனவே, அந்தக் கட்சிகள் அனைத்தும் எப்போதும் இணைந்திருக்க வேண்டும். அந்த ஒற்றுமையை பேணுவது பிரதான கட்சி என்ற வகையில் எமது பொறுப்பு.
இன்றுள்ள பிரச்சினைகள் நாம் ஏற்படுத்தி பிரச்சினைகள் அல்ல. 2015ஆம் ஆண்டு நாம் ஒப்படைத்த நாட்டை அல்ல நாம் 2019ஆம் ஆணடு பொறுப்பேற்றது. 2019 ஆம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வந்தபோது நாட்டைக் காப்பாற்றுவதற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களை மரணம் வரை கொண்டு செல்லும் சர்வதேச தீர்மானத்திற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது.
நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் முல்லைத்தீவு குருகந்த விகாரையின் பிரதம தேரர் காலமான போது அவரது பூதவுடலை வடக்கில் வைத்து அந்த ஆலயத்தின் மைதானத்தில் தகனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அன்றைய வடக்கின் நிலை அப்படித்தான் இருந்தது.
தேசிய பாதுகாப்பு என்று எதுவும் இருக்கவில்லை. அது மட்டுமின்றி எம்.சி.சி கையெழுத்திட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. எம்.சி.சி. உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதை நிறுத்திவிட்டு ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தை மீளப்பெற்றோம்.
சர்வதேச சமூகத்துடன் மோதி, எமக்கு வரும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராகவே இவற்றைச் செய்தோம். நாம் செய்தவற்றின் பலன்களே பல வேடங்களில் நம் முன் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் உள்ள அரசியலை தேசத்திற்கு புரிய வைக்கும் பொறுப்பை ஒரு கட்சியாக நாம் ஏற்க வேண்டும்.
நாட்டின் சுதந்திரத்திற்காக கடந்த காலத்தில் செய்த அர்ப்பணிப்பு பற்றி இன்று யாரும் பேசுவதில்லை. அது ஏன்.
எனவே நோர்வே போர்நிறுத்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து காப்பாற்றிய நாடு, ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை நிராகரித்து அதிலிருந்து வெளியேறிய நாடு, எம்.சி.சி. ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் காப்பாற்றிய நாட்டைக் நாம் காட்டிக் கொடுக்க மாட்டோம். நாட்டிற்காக உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடிய எம் மீது அந்த நம்பிக்கையை தொடர்ந்தும் வைத்திருக்க முடியும் என்பதை நான் கூற விரும்புகிறேன்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவுசெய்யப்பட்டமை எமக்கு பெரும் பலமாக அமைந்தது. அவரது அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையின் மீது தேசம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தது. இந்தக் கட்சி அவருக்குப் உறுதுணையாக இருந்ததைப் போலவே, பொதுஜன பெரமுன மீதும் அவர் ஒரு ஈர்ப்பைக் கொண்டு வந்தார். அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஏராளமான இளைஞர்கள் அவரை நம்பி தேர்தல் களத்தில் இறங்கினர்.
அதனாலேயே, பொதுஜன பெரமுனவின் ஏராளமான இளம் உறுப்பினர்கள் மீது அவர் நம்பிக்கை வைத்துள்ளார். அந்த நம்பிக்கையை புதிய இளைஞர்கள் பாதுகாக்க வேண்டும்.
நாட்டை இயக்கும் பிரதான அரசியல் கட்சி என்ற வகையில், நமது நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தெளிவான மதிப்பீடு இருக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் நாம் பெற்ற வெற்றியையும், பாராளுமன்றத்தில் பெற்ற வெற்றியையும் வரலாற்றில் வேறு எந்த தேர்தல் வெற்றிக்கும் ஒப்பிட முடியாது. வடக்கு, கிழக்கின் இனவாத அரசியல் கட்சிகளின் ஆதரவின்றி ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்ற நம்பிக்கை எப்போதும் காணப்பட்டது.
ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலிலும் இனவாத கோரிக்கைகளை அனுமதிக்க வேண்டியிருந்தது. எவ்வாறாயினும், இவ்வாறான இனவாத அரசியல் கட்சிகளின் தாக்கத்திற்கு ஆளாகாமல் ஜனாதிபதி ஒருவரை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது. அது தமிழ், முஸ்லிம் மக்களிடம் இருந்து விலகி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதல்ல. தமிழ், முஸ்லிம் இனத்தவருடன் மேலும் நெருக்கமாக்க முடிந்தால், அதுவே பொதுஜன பெரமுனவினால் செய்யக்கூடிய சிறந்த காரியம்.
அத்துடன் இனவாத தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தாளத்திற்கு ஆடாமல் மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மையை எம்மால் பெற முடிந்தது. 70 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒரு ஆசனத்திற்கு கீழே இறக்க மொட்டினால் முடிந்தது.
இது ஒரு வரலாற்று வெற்றி, அத்தகைய வெற்றியை வழங்குவதன் மூலம் மக்களும் தேசமும் எங்களிடம் என்ன கோரினர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் வெற்றி ஈட்டிய ஆரம்ப நாட்களில் இந்த நாட்டின் இளைஞர்கள் நாடு முழுவதும் சுவர்களில் ஓவியங்களை வரைந்தனர். அடையாளம் தெரியாத இளைஞர்கள் பெயர், முகவரிகளை குறிப்பிடாது படங்களை வரைந்தனர்.

சொந்த செலவில் நிறப்பூச்சுக்களை பெற்று பேருந்து நிறுத்தங்கள், அரசு அலுவலகங்கள், பாடசாலை சுவர்கள் என இரவு முழுவதும் வண்ணம் தீட்டினர். எவரது அழைப்போ, எவரது உத்தரவோ இருக்கவில்லை.
இன்று அந்த ஓவியங்களை தீட்டிய இளைஞர்கள் எங்கே என்று எமக்கு தெரியவில்லை. கட்சி அரசியல் தொடங்கிய நாள் முதல் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அரசியலினால் நாட்டை அசிங்கப்படுத்த வேண்டாம் என்றே ஓவியம் வரைந்த இளைஞர்கள் கூறினர். நாம் அச்செய்தியை புரிந்துக் கொள்ள வேண்டும்.

இன்று கடவுச்சீட்டு பெறுவதற்காக அந்த இளைஞர்கள் வரிசையில் நிற்கின்றனரா என்பதை தேடிப்பாருங்கள். அந்த வரிசையில் அவர்கள் நிற்பார்களாயின் அவர்களை மீண்டும் இந்நாட்டிற்கு கொண்டுவரக்கூடிய அரசியலில் ஈடுபடுங்கள். அதுவே பொதுஜன பெரமுனவில் எமக்குள்ள வரலாற்று எதிர்கால பணியாகும்.

Leave A Reply

Your email address will not be published.