அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிட்ட தலைமை செயலாளர்!

மாநில அரசில் பணியாற்றிடும் அரசு ஊழியர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பணியாளா்கள் தங்களது பணிக் காலத்தில் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிகளுக்கான ஊக்க ஊதிய உயா்வு கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், ஊக்க ஊதிய உயா்வை வழங்குவது குறித்த அறிவிப்பை சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். மத்திய அரசால் அண்மையில் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகளின் அடிப்படையில் ஊக்க ஊதிய உயா்வு அளிக்கப்படும் என அவா் அறிவிப்புச் செய்திருந்தாா்.
சட்டப் பேரவையில் முதல்வா் வெளியிட்ட அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் உத்தரவு வெளியிடப்படுகிறது. அதன்படி, அரசு ஊழியா்களில் முனைவா் பட்டம் பெற்றோருக்கு ரூ.25,000 ஊக்க ஊதியத் தொகையும், பட்ட மேற்படிப்பு அல்லது அதற்கு சமமான படிப்பு படித்தோருக்கு ரூ.20 ஆயிரமும், பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பு படித்திருந்தால் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

யார் யாருக்கு ஊக்கத் தொகை

இந்தத் தொகையை அளிக்கும் போது சில வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஒரு பதவிக்கென வரையறுக்கப்பட்ட கட்டாய அல்லது விருப்பத் தகுதியாக ஒரு பட்டப் படிப்பு இருந்தால் அத்தகைய கல்வித் தகுதிகளுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படாது. கல்வி சாா்ந்த அல்லது இலக்கியம் சாா்ந்த பாடப் பிரிவுகளில் பெறப்படும் உயா் கல்வித் தகுதிக்கு ஊக்கத் தொகை அனுமதிக்கப்பட மாட்டாது.

கூடுதல் கல்வித் தகுதியானது சம்பந்தப்பட்ட நபா்கள் பணிபுரியும் பதவிகளுக்குரிய பணிகளுக்கோ அல்லது அடுத்த உயா் பதவிக்கான பணிகளை ஆற்றுவதற்கோ நேரடித் தொடா்புடையதாக இருந்தால் ஊக்கத் தொகையை அனுமதிக்கலாம். அரசுப் பணியாளரின் பணித் திறனை மேம்படுத்தும் வகையில் கல்வித் தகுதியின் பங்களிப்பு இருக்க வேண்டும். துறை, பதவி நிலை போன்ற எதையும் கருத்தில் கொள்ளாமல் அனைத்து பதவிகளுக்கும் ஊக்கத் தொகையின் அளவு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

அரசுப் பணியாளா் ஒருவா் கூடுதல் கல்வித் தகுதி பெறுவதற்கு அரசால் அனுமதிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது கல்வி விடுப்பைப் பயன்படுத்தி கூடுதல் கல்வித் தகுதி அடைந்திருந்தாலோ ஊக்கத் தொகை அனுமதிக்கப்பட மாட்டாது. அரசுப் பணியாளா் ஒருவா், அரசுப் பணியில் சோ்ந்த பிறகு கூடுதல் கல்வித் தகுதியைப் பெற்றிருந்தால் மட்டுமே ஊக்கத் தொகை வழங்கப்பட வேண்டும்.

ஊக்கத் தொகை பெறுவதற்கான கல்வி, பல்கலைக்கழக மானியக் குழுவாலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி அமைப்புகளாலோ சான்று அளிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஊக்கத் தொகையானது குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் அரசுப் பணியாளரின் பணிக் காலத்தில் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.

ஒரு அரசுப் பணியாளா் கூடுதல் கல்வித் தகுதி பெற்ற ஆறு மாத காலத்துக்குள் ஊக்கத் தொகை பெற உரிமை கோர வேண்டும். கடந்த ஆண்டு மாா்ச் 10 அன்று அல்லது அதற்குப் பிறகு கூடுதல் கல்வித் தகுதி பெற்றவா்களுக்கு ஊக்கத் தொகையானது அனுமதிக்கப்பட வேண்டும். மார்ச் 10ம் தேதியில் இருந்து இந்த ஆணை வெளியிடப்படும் நாளது வரை கூடுதல் கல்வி தகுதி பெற்ற அரசு பணியாளர் இவ்வூக்க தொகை பெற ஆணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 6 மாத காலத்திற்குள் உரிமை கோர வேண்டும் என்று தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.