தமிழ்நாடு உள்பட நாட்டின் 9 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது – கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரம்
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, உத்தரப்பிரதேசம், டெல்லி, ஜார்க்கண்ட், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய 9 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இங்கு மொத்தம் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 991 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்பதால் டெங்கு பரவல் குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு பாதிப்பு மற்றும் பாதிக்கப்படாத மாநிலங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் பதிவான டெங்கு பாதிப்புகளைக் காட்டிலும், நடப்பாண்டில் அதிகமானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் மருத்துவக்குழுவினர் டெங்கு பாதிக்கப்பட்ட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து, டெங்கு கட்டுப்பாடு பணிகளை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு பாதிப்புகளை முன்னரே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது, நோய் பரவும் இடங்களை அறிந்து கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் சுகாதாராத்துறை அமைச்சகம் கவனம் செலுத்தி வருகிறது.
பொதுவாக மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கமாகவுள்ளது. நன்னீரில் உருவாகும் ஏடிஸ் கொசுக்கள், பகலில் மனிதர்களை கடித்து டெங்குவை பரப்புகின்றன. டெங்கு பாதிக்கப்பட்ட ஒருவரை கடிக்கும் கொசுக்களால் அவரிடமிருந்து மற்றவர்களுக்கும் பரவும் அபாயமும் உள்ளது.
சாதாரண காய்ச்சல் போல் இல்லாமல், தலைவலி, உடல்வலி, கண்ணுக்கு பின்புறம், எலும்பு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வலியை ஏற்படுத்தும். இதை உணர்வோர் உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலமே பெரும் பாதிப்புகளை தவிர்க்க முடியும்.