இந்தியத் துணைத் தூதுவருடன் முன்னாள் எம்.பி. திலகர் சந்திப்பு.
இலங்கைக்கான இந்திய உதவித் தூதுவர் (கண்டி) முனைவர் எஸ். ஆதிராவை முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜா சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் தலைமையில் இயங்கும் தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்தில் பயன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அத்தகைய உதவிகளைப் பெறுபவர்களின் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது, அவர்களுக்கான புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
நிதியத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்கனவே புலமைப் பரிசில் பெற்றவர்களை ஒருங்கிணைத்து அவர்களது அடைவுகளை அடையாளப்படுத்துவதன் ஊடாக எதிர்கால மாணவ சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக முன்வைக்கக்கூடிய திட்டங்கள் குறித்தும் தனது முன்மொழிவுகளை துணைத்தூதுவரிடத்தில் தான் சமர்ப்பித்ததாகவும் முன்னாள் எம்.பி. திலகர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நான் குறித்த நிதியத்தின் கீழ் புலமைப்பரிசில் உதவிகளைப் பெற்றுக்கொண்டவன் என்ற வகையில் இந்தப் பணிகளை முன்னெடுப்பதில் தன்னார்வத்துடன் இந்தத் திட்டத்தை முன்மொழிகின்றேன் என்று தெரிவித்தேன். அது தொடர்பான கடந்த கால ஆவண சேகரிப்புகளையும் அண்மையில் வெளியிடப்பட்ட எனது ‘பாராளுமன்றத்தில் திலகர்’ உரைத் தொகுப்பு நூலின் பிரிதியொன்றையும் உதவித் தூதுவர் முனைவர் எஸ். ஆதிராவிடம் கையளித்தேன்” – என்றார்.
இந்தச் சந்தப்பின்போது உதவித் தூதரகத்தின் இரண்டாம் நிலை செயலாளர் கிருஷ்ணபிரசாத்தும் பிரசன்னமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.