இராணுவத்தினர் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி வருவதாக மக்கள் விசனம்.

மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொள்ளும் சோதனை சாவடியில் சோதனை என்ற பெயரில் தொடர்ச்சியாக மக்களை இராணுவத்தினர் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் இருந்து போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்குடன் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனைச் சாவடியில் வைத்து மன்னாரில் இருந்து வெளி இடங்களுக்கு செல்பவர்களும், வெளி இடங்களில் இருந்து மன்னாரிற்கு வருகின்றவர்களும் குறித்த சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினர் பலத்த சோதனைகளை மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக வாகனங்கள் மற்றும் உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

மேலும் சிறு வியாபார நடவடிக்கைகள், மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், குறித்த சோதனை நடவடிக்கை காரணமாக பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

தற்போதைய சூழலில் போதைப் பொருள் கடத்தல் பல்வேறு வகையில் பாதுகாப்பான முறையில் இடம் பெற்று வருகின்ற நிலையில் அன்றாட தொழில் நடவடிக்கைகு என மன்னார் வருகை தரும் மக்கள் ,கர்ப்பிணி தாய்மார்கள் என அனைவரும் பாரபட்சம் இன்றி சோதிக்கப்படுவது மன்னார் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரம் மழை காரணமாக குறித்த சோதனை சாவடி பகுதி முழுவதும் மழை நீர் தேங்கிய நிலையில் காணப்படுகின்றது.

எனினும் மக்களையும் வாகனங்களையும் மழை நீர் மற்றும் சேற்றுக்குள் இறக்கி கடுமையாக சோதனை மேற்கொள்ளப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் இருந்து வியாபார நடவடிக்கை களுக்காக வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்ற சகல பொருட்களும் குறித்த சோதனைச்சாவடி பகுதியில் இராணுவத்தினரால் இறக்கப்பட்டு சோதனைகளுக்கு பின்னர் மீண்டும் ஏற்றப்படுகின்றது.

எனவே குறித்த சோதனை சாவடியில் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்காத வகையில் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியை அகற்றி அல்லது வேறு பகுதிக்கு மாற்றி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.