சீனி கட்டுப்பாட்டு விலையை நீக்க நிதியமைச்சு தீர்மானம்.
அரிசியை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்கவும், இன்று நள்ளிரவு முதல் சீனி கட்டுப்பாட்டு விலையை நீக்கவும் நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
அத்துடன், டிசம்பர் இறுதி வரை அரிசி இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்க்ஷ மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களுக்கு இடையில் நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு டிசம்பர் 31 ஆம் திகதி வரை அனுமதி வழங்குமாறு இறக்குமதியாளர்களின் கோரிக்கையை நிதி அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் அரிசியை 100 ரூபாவிற்கு வழங்க முடியும் என இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
துறைமுகத்தில் சிக்கியுள்ள 200 சீனி கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதன் பின்னர் சீனியின் விலை மேலும் குறையலாம் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக 976 கொள்கலன்களில் சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொள்கலன்களை விடுவிக்க 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த பணத்தை வர்த்தக வங்கிகளுக்கு விரைவில் வழங்க இணங்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 122 ரூபாவாகவும், சிவப்பு சீனி கிலோகிராம் ஒன்று 125 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள பின்னணியில், சந்தையில் சீனியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனினும், இன்று (03) நள்ளிரவு முதல் சீனி கட்டுப்பாட்டு விலை நீக்கப்படவுள்ளது.