பெட்ரோல், டீசல் விலை குறைப்பு – மக்களுக்கு இனிப்பான தீபாவளி செய்தி
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில், வரலாறு காணாத வகையில், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. தமிழகம், டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல், 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்படுகிறது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி, லிட்டருக்கு 10 ரூபாயும் குறைக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இது மத்திய அரசின் தீபாவளி பரிசு. VAT எனப்படும் மதிப்பு கூடுதல் வரியை மாநில அரசுகள் குறைக்க முன்வர வேண்டும். இதன் மூலம் பொது மக்கள் பயனடைவார்கள்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.