அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கான நிர்ணய விலை நீக்கம்…
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் அரிசிக்கான 65 ரூபா விசேட வர்த்தக வரி அடுத்த 6 மாதங்களுக்கு 25 சதமாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரிக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கு 65 ரூபா விசேட வர்த்தக வரி விதிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, சீனி, பருப்பு, கோழி இறைச்சி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான நிர்ணய விலை நீக்கப்பட்டமை தொடர்பிலான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, குறித்த அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச நிர்ணய விலை நேற்றிரவு முதல் நீக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இதற்கு முன்னர் வௌியிடப்பட்ட 07 வர்த்தமானி அறிவித்தல்கள், நேற்றிரவு வெளியான புதிய வர்த்தமானி அறிவித்தலூடாக வலுவிழக்க செய்யப்பட்டுள்ளது.
*இதனடிப்படையில், கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி வெள்ளை மற்றும் சிவப்பு சீனிக்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கான வர்த்தமானி அறிவித்தல்
*2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி மைசூர் பருப்பு, பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன் உள்ளிட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலைக்கான வர்த்தமானி அறிவித்தல்
* சோளத்திற்காக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்
* அன்றைய தினமே, கோழி இறைச்சிக்கான அதிகபட்ச சில்லறை விலைக்கான வர்த்தமானி அறிவித்தல்
என்பன புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ளது.
* அதுமாத்திரமன்றி 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி கருவாடு, தேங்காய், காய்ந்த மிளகாய், மாசி உள்ளிட்ட சில பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்,
* 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி நெத்தலி, பயறு, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு என்பனவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்,
* 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி கடலை, கோதுமை மா, இறக்குமதி செய்யப்படும் பால்மா என்பனவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்
என்பன நேற்றிரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ளது.