கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு.
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர் சிலர் சுகாதார விதிமுறைகள் எவற்றையும் பின்பற்றாமல் கவனயீனமாக செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.
இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் மீண்டும் கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பொது மக்களில் சிலர் செயற்படும் விததத்துக்கமைய எதிர்காலத்தில் கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புள்ளது. இதனை தடுக்க முடியாத நிலைமையும் ஏற்படும்.
தற்போது நாளாந்தம் 10 – 25 மரணங்கள் பதிவாகி வருகின்றன. அத்துடன் நாட்டில் இன்னும் சிலர் தடுப்பூசியைப் பெறாமலுள்ளனர். அவ்வாறானவர்களை துரிதமாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம். அத்தோடு மேலும் சிலர் வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்ல ஆரம்பித்துள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட சிலரின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளின் காரணமாக தற்போது சீராகவுள்ள கொவிட் -19 நிலைமையில் நிச்சயம் மாற்றங்கள் ஏற்படக் கூடும் என்றார்.