தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடிய பிரதமர் மோடி

தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி, ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தின் நவ்ஷேராவில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். முதலில் பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

நாட்டு மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க ராணுவ வீரர்களே காரணம் என, பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். பாரத மாதாவின் பாதுகாப்பு அரணாக ராணுவ வீரர்கள் திகழ்வதாகவும் மோடி புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்த்துகளையும் ஆசீர்வாதத்தையும் கொண்டு வந்திருப்பதாக கூறினார். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நடத்தப்பட்ட துல்லிய தாக்குதலின் போது வீரர்கள் காட்டிய தீவிரம் மெய்சிலிர்க்க வைத்ததாக பெருமிதம் தெரிவித்தார்.

இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க பல முயற்சிகள் நடைபெறும் போதும் நமது வீரர்கள் அவற்றை துணிவுடன் எதிர்க்கொண்டு முறியடித்து வருவதாக மோடி பாராட்டினார். ராணுவ தொழில்நுட்பத்தில் பிற நாடுகளை நம்பியிருந்த காலம் மாறி, தற்போது 200க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாக குறிப்பிட்ட மோடி, ராணுவ துறையில் இந்தியா தற்சார்பு அடைந்து வருவதாகவும், கூறினார். அப்போது ராணுவ வீரர்களும் பிரதமர் மோடியும் இணைந்து பாரத மாத வாழ்க என்ற கோஷத்தைஎழுப்பினர்.

பின்னர் ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டிவிட்டு, அவர்களுடன் தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். இந்நிலையில், நவ்ஷேரா செக்ட்டரில் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கவுரவித்த பிரதமர் மோடி அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

Leave A Reply

Your email address will not be published.