காஞ்சிபுரம் பூட்டிக்கிடந்த நிறுவனத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆண்,பெண் சடலங்கள்.. மாயமான செக்யூரிட்டிகள் – நடந்தது என்ன?
தனியார் நிறுவன கழிவறையில் ஆண் , பெண் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் மாயமான செக்யூரிட்டிகள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், சிட்கோல் ஏராளமான கம்பெனிகள் செயல்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கு செயல்பட்டு வந்த கம்பெனி ஒன்று தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானது. அந்த கம்பெனி இதுவரை செயல்படாத நிலையில் காவலாளி மட்டும் ஒருவர் பாதுகாப்பு பணியில் இருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தின் மேலாளர் அந்த கம்பெனியில் ஒரு பகுதியில் உள்ள பணியை செய்வதற்காக ஆட்களுடன் வந்தார்.
அப்போது அந்த நிறுவனத்தின் மூன்றாவது மாடியில் சென்று பார்த்த போது துர்நாற்றம் வீசியது மேலும் அங்கு பார்த்த போது இரண்டு கழிவறையில் அழுகிய நிலையில் சடலங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து போலீசார் அழுகிய நிலையில் கிடந்த இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் இறந்து கிடந்தது 22 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் என்பது தெரியவந்தது. ஆண் ஒரு கழிவறையிலும், பெண் மற்றொரு கழிவறையிலும் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “ தனியார் நிறுவன கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த ரத்தன்போரா (வயது 25) என்பது தெரியவந்தது. அவருடன் இறந்து கிடந்தது ரத்தன்போராவின் உறவுக்காரச் சிறுமி. ரத்தன்போராவுக்கும் சிறுமிக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது.
இதுகுறித்து அறிந்த அவரது உறவினர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரத்தன்போராவுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடித்து சிறுமியை மீட்டு உறவினர்களிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் சிறுமி மீண்டும் அந்த இளைஞருடன் தொடர்பில் இருந்துள்ளார். ஒருகட்டத்தில் சிறுமி மீண்டும் வீட்டில் இருந்து வெளியேறி அந்த இளைஞருடன் சென்றுவிட்டார். ரத்தன்போரா இந்த தனியார் நிறுவனத்தில் தான் செக்யூரிட்டியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். சிறுமியும் ரத்தன்போராவும் அந்த நிறுவனத்திலே தங்கிவிட்டனர். அங்கு ஏற்கனவே பணியில் இருந்த இரண்டு செக்யூரிட்டிகள் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில்தான் இருவரும் தனியார் நிறுவனத்தின் கழிவறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த செக்யூரிட்டிகள் இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.அவர்கள் பிடிபட்டால் தான் இந்த வழக்கில் என்ன நடந்தது என்பது தெரியவரும். இளைஞரை கொலை செய்துவிட்டு சிறுமியை செக்யூரிட்டிகள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.