மண்சரிவு அபாய எச்சரிக்கை: 41 குடும்பங்கள் இடம்பெயர்வு.
மண்சரிவு அபாய வலயத்துக்குட்பட்ட பசறை, கனவரல்ல – மௌசாகலை பகுதியில் உள்ள சுமார் 11 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் மௌசாகலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் கனவரல்ல, கோணக்கலை ஆகிய பிரதேசங்கள் மண்சரிவு அபாயம் உள்ள வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
பெய்து வரும் கடும் மழையால் மேலும் மண்சரிவுகள் அதிகரித்தவாறு உள்ளன.
கனவரல்ல பகுதி மக்கள் இக்கட்டான சூழ்நிலை சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்து அவரது இணைப்பு அதிகாரி ஜி.ஜெயச்சந்திரன், பசறை பிரதேச சபை உறுப்பினர் ஈசன் ஆகியோர் நேற்று அகதிகளாகத் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்குச் சென்றனர்.
இதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் ஆலோசனைக்கு அமைய இன்று காலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை குறித்த அதிகாரிகள் செய்து பூர்த்தி செய்தனர்.