தமிழ்நாட்டில் 8-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்! புதிய தேதியை அறிவித்தது சுகாதாரத்துறை
தமிழ்நாட்டில் 8-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம், சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய தேதிய சுகாதார அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் எளிதாக தடுப்பூசி பெறும் வகையில், தமிழக அரசு சார்பாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், அரசின் முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. இதுவரையில் 7 முகாம்களை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு நடத்தி முடித்துள்ளது. இந்நிலையில், 8-வது முகாமை நடத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
இதனை நவம்பர் 6-ம்தேதியான நாளை நடத்துவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சில காரணங்களுக்காக தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
தீபாவளியையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், முகாமை வேறு தேதியில் நடத்துமாறு சுகாதார பணியாளர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதேபோன்று 15 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதனை கவனத்தில் கொண்டு, கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நவம்பர் 14-ம்தேதி நடத்தப்படும்.
அதுவரைக்கும் மக்கள் காத்திருக்க தேவையில்லை. அருகாமையில் உள்ள அரசின் சுகாதார மையங்கள், மருத்துவமனைகளுக்கு சென்றுதடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். நாள்தோறும், மாநில அளவில் 2,800 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டையும் சேர்த்து நம்மிடம் மொத்தம் 65 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன. எனவே மக்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். மாநிலத்தில் 14.09 லட்சம் பேர் இரண்டாவது டோஸாக கோவாக்சின் செலுத்தப்படவுள்ளது. 51.60 லட்சம்பேருக்கு இரண்டாவது டோஸாக கோவாக்சின் செலுத்தப்படும்.
வீட்டை விட்டு வெளியே வர முடியாதவர்களை அடையாளம் கண்டு, அவர்களது இல்லத்திற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதனை மாவட்ட ஆட்சியர்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் 71 சதவீதம்பேர் கொரோனா ஊசி செலுத்தியுள்ளனர். அவர்களில் 31 சதவீதத்தினர் 2-வது டோஸையும் செலுத்தியுள்ளார்கள். இம்மாத இறுதிக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த விட வேண்டும் என முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.